கோவை நவஇந்தியாவில் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரியின் அறிவியல் மன்றம் சார்பில் தேசிய அறிவியல் தினம் கல்லூரியின் கருத்தரங்க அறையில் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு , ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரியின் முதல்வர் – செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக, கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண் வணிக வளர்ப்பு சங்கம், தொழில்நுட்ப வணிக வளர்ப்பு மையத்தின் மேலாண்மை இயக்குநர் – முதன்மை செயல் அதிகாரி ஏ.வி. ஞானசம்பந்தம் கலந்து கொண்டார்.

விழாவில் , அவர் பேசியதாவது : இந்திய அரசாங்கம் வேளாண் குப்பைகளிலிருந்து பயனுள்ள பொருட்களை உருவாக்குவதை ஊக்குவிக்கிறது. குறிப்பாக வாழை, தேங்காய் போன்றவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நார் போன்றவற்றை பயன்படுத்தி, மிகவும் பயனுள்ள பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. வேளாண்மைக்குப் பயன்படும் வகையில் புதிய தொடக்க நிறுவனங்களை உருவாக்குபவர்களுக்கு நிதியுதவி செய்கிறது. தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பமான டிரோன், ரொபோடிக்ஸ் ஆகியவை வேளாண் துறையில் வியப்பூட்டும் பங்களிப்பை செலுத்தி வருகிறது. அதன்படி, விவசாயிகளின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் டிரோன்கள் பறந்து சென்று தாவரங்களின் வளர்ச்சியைப் புகைப்படம் எடுத்து உதவுகிறது. நல்ல நிலையில் வளராத தாவரங்களை அடையாளம் கண்டு விவசாயிகளுக்குத் தெரியப்படுத்துகிறது. மத்திய, மாநில அரசுகள் மாசுபாடில்லாத மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த யோசனைகளை அங்கீகரித்து, தொழில் தொடங்குவதற்கேற்ற மானியத்தை வழங்குகிறது. வேளாண் பல்கலைக்கழகத்தின் புதிய தொடக்க நிறுவனங்கள் வளர உதவும் அமைப்பின் மூலம் தேசிய அளவிலான தொழில்முனைவோர் நிகழ்வுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. கல்லூரி படிப்பை முடித்த இளம் பட்டதாரிகளுக்கு தொழில் தொடங்க முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது பெரிய தொழில் நிறுவனங்கள் நிதியுதவி வழங்க தயாராக உள்ளன. ஒரு தொழில் முனைவோருக்கு ரூபாய் 4.5 இலட்சம் வரை உதவி வருகிறது. எனவே, வேளாண் மற்றும் பிற துறை சார்ந்த தொழில்முனைவோர்கள் வரவேற்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஏற்ற உதவி வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து , தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளான ஏஐ கட்டளையை உருவாக்கும் போட்டியில் பி.காம். ஐ.டி இரண்டாமாண்டு மாணவிகள் வி.நேஹா, ஏ.ஸ்ரீ வினிதா ஆகியோரும், ஐடியதான் போட்டியில் பி.எஸ்.சி. சி.எஸ். டி.ஏ. இரண்டாமாண்டு மாணவர்கள் தருண் ராஜ், கே.பால குமார் ஆகியோரும், பிராஜெக்ட் எக்ஸ்போவில் இயற்பியல் மூன்றாமாண்டு மாணவிகள் எம்.ஜீவிதா, வி.தனுஸ்ரீ ஆகியோரும் முதல் பரிசினைத் தட்டிச் சென்றனர். வெற்றி பெற்ற மாணவர் – மாணவியர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேரா.வி.நிவேதன் அறிவியல் மன்ற ஆண்டறிக்கை வாசித்தார்.

முன்னதாக, அறிவியல் மன்ற மாணவத் தலைவர், மூன்றாமாண்டு உயிரி தொழில்நுட்பவியல் துறை மாணவி ஏ.சமா அஃப்ரி அனைவரையும் வரவேற்றார். அறிவியல் மன்ற மாணவச் செயலர், இரண்டாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவி கே.என்.சூசன் நன்றி கூறினார். விழாவின் ஏற்பாடுகளை அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் ம.ஸ்ரீதர், துறை சார்ந்த பேராசிரிய ஒருங்கிணைப்பாளர்கள், மாணவ உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்
: எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed