ஒரு நாட்டை ஆளக்கூடிய மன்னன் எனும் கூறி கொள்ளும் ஆட்சியாளன் என்பவன், அவன் சிறந்த ஆட்சியாளனாக வேண்டுமென்றால், அவன் ஆட்சியின் கீழ் இருக்கக்கூடிய மக்கள் எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதை நன்கு அறிந்திருக்க வேண்டும். மேலும், அவர்களுடைய நிறை குறைகள் என்ன என்பதையும், அதற்கு தான் என்ன செய்ய வேண்டும் என தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கான தினமும் உன் உணவும், இருக்க இடமும், தடையின்றி அவர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும். இதுவே ஒரு சிறந்த ஆட்சியாளனின் நிர்வாகமாகும்.

இப்படிப்பட்ட சிறந்த ஆட்சியாளர்கள் தான் அந்த காலத்தில் மக்களுக்கு வேலை இல்லாத கால சூழ்நிலையில் அவர்களுக்கு வேலை செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து அவர்களை வேலை செய்ய செய்து, அதற்கு கூலியாக தானியங்களை வாரி வழங்கியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட காலகட்டத்தில் தான் மன்னர்கள் தங்களுடைய ஆட்சியின் கீழ் இருக்கும் பகுதியில் கோயில்களையும், நீர்நிலைகளையும் உருவாக்கி கொள்வார்கள்.

மன்னர்கள் தங்களின் மக்களுடைய நிலையறிந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து அவர்களை காப்பாற்றி வந்த அந்த காலகட்டத்தை நினைவில் நிறுத்தி தான், நம்முடைய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுடைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான், மக்களின் மீது இருந்த அக்கறையால், மக்களின் நலம் காக்கவும், மக்களின் உரிமைகளை காக்கவும் பல வளர்ச்சி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், போன்ற பல திட்டங்களை கொண்டு வந்ததின் வரிசையில் தான், காங்கிரஸ் ஆட்சி காலகட்டமான 1989-ம் ஆண்டு, ஜவகர் வேலை வாய்ப்பு திட்டம் (JRY) என்ற ஒரு மக்களுக்கான திட்டத்தை ராஜீவ் காந்தி அறிமுகப்படுத்தினார். பின்னர், அதே காங்கிரஸ் ஆட்சி 1999 ம் ஆண்டு இந்த திட்டத்தை மேலும் சீரமைத்து, ஜவகர் கிராம் சம்ரிதி யோஜனா (JGSY) என பெயரிட்டு இந்த திட்டத்தை மிகவும் சிறப்பாக செயல்படுத்தி வந்தனர்.

பின்னர் 2001 ம் ஆண்டு பாஜக ஆட்சி ஏற்ற பிறகு இந்த திட்டத்தை சம்பூர்ண கிராமீண் ரோஜ்கர் யோஜனா (SGRY) திட்டம், என இந்த திட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்தனர். இந்த திட்டத்தின் பெயரில் ஏற்கனவே ஜவகர் என நேருவின் பெயர் குறிப்பிட்டு இருந்ததை நீக்கிவிட்டு தான் இந்த திட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் இந்த திட்டத்தின் வாயிலாக, மக்களுக்கு மிகவும் குறைந்த நாட்கள் தான் வேலை வழங்கப்பட்டு உள்ளது. மேலும், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அரிசி மற்றும் கோதுமை தானியங்கள் வேலைகள் நடைபெறும் நாட்களில் வழங்காமல், தாமதமாக வழங்கப்பட்டு வந்துள்ளது எனவும், அப்படி தாமதமாக வழங்கப்பட்ட தானியங்கள் கூட தரமற்றதாகவும் இருந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நிதி ஒதுக்கீட்டில் பல குளறுபடிகள் இருந்ததினால் மக்களுக்கு பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

இந்த காலகட்டத்தில் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் SGRY திட்டத்தை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (MGNREGS) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மிக முக்கியமான கிராமப்புற ஏழை-எளிய மக்கள் ஒரு ஆண்டில் ஒரு குடும்பத்திற்கு குறைந்தது 100 நாட்கள் வேலையை உறுதி செய்தது. மேலும், இந்த திட்டத்தில் ஆண்கள், பெண்கள் என்று பாகுபாடு இல்லாமல் சம ஊதியம் வழங்கப்பட்டது. மிகவும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களுடைய வேலை செய்யும் திறனுக்கேற்றவாறு அவர்கள் வேலை செய்யும் அளவிற்கு அவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது. ஊதியம் முறையாக நிர்ணயிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு ஊதியத்தை கையில் கொடுத்தால் அதில் முறைகெடுகள் பல நடக்கும் என்பதால் நேரடியாக அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. மேலும், பல மாற்றங்கள் செய்யப்பட்டு மக்களுக்கு மிகவும் அதிக அளவில் பயன் பெறும் திட்டமாக இருந்து வந்தது இந்த திட்டம்.

நாட்டு மக்கள் ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயன் கொடுக்க கூடிய இந்த திட்டத்தை பாஜக ஆட்சியினர் ஏற்கனவே 2001 ம் ஆண்டு முழுமையாக முடக்க முடியாது என்ற சூழ்நிலை இருந்ததினால், அப்போது அந்த திட்டத்தை ஜவகர் என்ற வார்த்தையை மட்டும் நீக்கி, பெயர் மாற்றம் மட்டும் செய்து நடைமுறைப்படுத்தினர். பின்னர், 2014 ம் ஆண்டு இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு
வந்ததற்கு பிறகு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை குறித்து, மோடி, அமித்ஷா மற்றும் பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் முதல் பாஜகவின் கடைசி தொண்டன் வரை, அந்த திட்டத்தை படிப்படியாக விமர்சனம் செய்து மக்களின் மனதில் படிப்படியாக அந்த திட்டத்தில் பல குறைபாடுகள் இருப்பது போல் வடிவமைத்து காட்டி கொண்டிருந்தார்கள்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் மோடி நாடாளுமன்றத்திலேயே இந்த திட்டத்தை பலமுறை விமர்சனம் செய்திருக்கிறார். அதை தொடர்ந்து பாஜக கட்சியினரும், அந்த திட்டத்தில் பணி புரியும் ஏழை மக்கள் வேலை முடிந்த பிறகு அமைதியாக அமர்ந்து உரையாடுவதையும், அவர்கள் ஓய்வு நேரத்தில் மரத்தடியில் அமர்ந்திருக்கும் போது அவர்கள் கவலைகளை மறந்து ஆடிப் பாடுவதையும் விமர்சனம் செய்ய தொடங்கினார்கள். இப்படி சிறிது சிறிதாக மக்கள் மனதில் இந்த திட்டத்தை பற்றி தவறான கருத்துக்களை சித்தரித்து, அதை மக்கள் மனதில் பதியவும் செய்தார்கள். இதற்கெல்லாம் காரணம், இந்த பெயர் மாற்றம் தான், இந்த பெயர் மாற்றத்தை செய்ய வேண்டும் என்பதற்காக இவர்கள் முன்கூட்டியே பல குளறுபடி பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இப்படி சுற்றி வளைத்து வேலை செய்வதற்கான காரணம்,

தங்க நாற்கரம் சாலை போன்ற அனைத்து நல்ல திட்டங்களும் ராஜீவ் காந்தியின் தீவிர முயற்சியால் திட்டமிடப்பட்டு இருந்ததை, தற்போது தாங்கள் தான் அதை திட்டு வடிவமைத்து நடைமுறைப்படுத்தியது போல், இந்த திட்டத்தையும் அவர்கள் முழுமையாக நீக்கிவிட முடியாது, என்ற சூழ்நிலையில் தான், மகாத்மா காந்தியின் பெயரை மட்டும் நீக்கிவிட்டு, 100 நாள் வேலைக்கு பதிலாக, 125 நாள் வேலை வழங்குகிறோம் என, ஒரு பொய்யான பிம்பபத்தை வடிவமைத்து இருக்கிறார்கள். உண்மை நிலவரம் என்னவென்றால், இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு சரிவர ஒதுக்கவில்லை என்பது உலகறிந்த ஒரு விஷயம், மேலும் கடந்த 2022-23, 2023-24 ஆகிய நிதி ஆண்டுகளிலும், கடந்த ஆண்டும் கூட ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கவில்லை. என்ற உண்மையும் நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள். இப்படிப்பட்ட நிலையில், இவர்கள் எதிர்காலத்தில் எப்படி 125 நாள் வேலை கொடுப்பார்கள் என்பதுதான் மக்களுடைய கேள்வியாக இருந்து வருகிறது.

தற்போது அந்த திட்டத்திற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர்,வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்பு திட்டம் என பெயர் மாற்றம் செய்து அந்த மசோதாவை மத்திய ஊரக மேம்பாட்டு துறை அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவின் பெயர் மாற்றத்தை எதிர்த்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்தும் எந்த பலனும் இல்லை. எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் இந்த பெயர் மாற்றத்தின் வாயிலாக இந்த திட்டத்தை முடக்கும் வேலையை தான் ஒன்றிய அரசு செய்கின்றது என்றும், அது மட்டும் இல்லாமல், ஒரு நாட்டின் முதுகெலும்பே கிராமங்கள் தான், என கூறி கிராமங்களின் வளர்ச்சியே நமது நாட்டின் வளர்ச்சி என்று கூறிய, நமது தேசத்தின் தந்தை மகாத்மா காந்தியின் பெயரை இந்த திட்டத்திலிருந்து நீக்கியது, பாஜக தலைவர்கள் கோட்சேவின் வாரிசுகள் நாங்கள் எனக் கூறிக் கொள்ளும் நிலையில், மகாத்மா காந்தியின் பெயரை இந்த திட்டத்திலிருந்து நீக்கியதால், நம் நாட்டு மக்கள் அனைவருடைய மனங்களிலும் குடியிருக்கும் மகாத்மா காந்தியை இவர்கள் இரண்டாவது முறையாக கொலை செய்ததாகவே கருதுகின்றனர்.

ராஜீவ் காந்தி கொண்டு வந்த இந்த மக்கள் நல திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், ஒரு ஊராட்சியில் ஒரு குளம் வெட்டும் பணியை செய்வதற்கு திட்ட மதிப்பீடாக 3 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்தால், அந்த பணியை ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்ததாரர் தனக்கு சொந்தமான இயந்திரத்தின் மூலம் ஒரே நாளில் அப்பணியை முடித்து விடுவார். மேலும், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அப்பணி தொடர்ந்து செய்தாலும் கூட, ஒரு நாளுக்கு இயந்திரத்தின் வாடகை மற்றும் சில ஆட்களின் கூலி என வைத்து கொண்டாலும் 15,000 ரூபாய் கூட செலவு ஆகாது. மேலும், சில அதிகாரிகளுக்கு செலவு செய்வது உட்பட கணக்கு பார்த்தாலும் மொத்த செலவு ஒரு லட்ச ரூபாயை கடந்து போகாது, மீதம் இருக்கும் இரண்டு லட்ச ரூபாய் ஒப்பந்ததாரருடைய நிகர வருமானமாக போய்விடுகிறது.

இப்படிப்பட்ட நிலையை மாற்றுவதற்காக தான், 1989 ம் ஆண்டு ராஜீவ் காந்தி ஜவகர் வேலைவாய்ப்பு திட்டம் என்ற திட்டத்தின் வாயிலாக, பணி மேற்கொள்ளக் கூடிய ஊராட்சியை சேர்ந்த ஏழை எளிய மக்களே அந்த மூன்று லட்சம் ரூபாய் தொகையையும் கூலியாக பிரித்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், மண் வேலைகள் எதையும் இயந்திரங்கள் மூலம் செய்யக்கூடாது, பொதுமக்கள் தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் அந்த திட்டத்தை கொண்டு வந்தார். அந்த திட்டம் தான் படிப்படியாக பரிணாம வளர்ச்சியில், தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்ற பெயரில் நடந்து கொண்டிருந்தது. இப்படிப்பட்ட மகத்தான திட்டத்திற்கு நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் முழுமையாக ஆதரவு கொடுக்காமல் என்ன செய்வார்கள். நமது ஒன்றிய அரசு ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்காகத்தான் திட்டங்களை வகுக்க வேண்டுமே தவிர, அரசியலுக்காக திட்டங்களை திட்டுவதும், அந்த திட்டங்களுக்குள் மக்களை திணிப்பதும் ஒரு ஆட்சியாளர்களின் பணியாக இருக்க கூடாது, என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும், இல்லையென்றால் மக்கள் புரிய வைப்பார்கள்…

P.G.பாலகிருஷ்ணன்
பொன்னேரி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed