தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் நெல்லை ப.கலைவாணன், திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தேமுதிக நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ஆனந்தமணி மற்றும் இருவர் மீது, நெல்லை சந்திப்பு போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம், அவமதிக்கும் நோக்குடன் அச்சுறுத்தல், ஏமாற்றி மோசடி செய்தல், காயம் விளைவித்தல் உள்ளிட்ட ஏழு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்த விவரம்:
திருநெல்வேலி ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் ப.கலைவாணன் என்பவர் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் இருந்து வந்தார். பின்னர், தேமுதிக தொடங்கிய பிறகு அதில் உறுப்பினராகி தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த ப.கலைவாணன், நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை வழங்கி இருக்கிறார். அதில், கூறியிருப்பதாவது,
நான் எனது மகன் சந்துருவின் திருமணத்திற்கு கட்சியின் தலைமை நிர்வாகிகளை அழைத்து வரக்கோரி மாவட்ட செயலாளர் என்ற முறையில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன் என்பவரிடம் கோரிக்கை வைத்தேன். அப்பொழுது மாவட்ட துணை செயலாளர் ஆனந்தமணியும் உடன் இருந்தார். அப்பொழுது இருவரும் கட்சியின் தலைமை நிர்வாகிகளை அழைத்து வர வேண்டும் என்றால் அதற்குரிய செலவிற்காக 2 லட்சம் ரூபாய் எங்களிடம் நீ தர வேண்டும் என கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் கடந்த 28.4.2025 அன்று நெல்லை சந்திப்பில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைத்து கட்சியின் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் செல்வகுமார், முன்னாள் மேலப்பாளையம் பகுதி செயலாளர் வாள்ஷேக் மற்றும் சமாதானபுரம் வார்டு செயலாளர் முனியாண்டி மகன் முருகன் ஆகியோர் முன்னிலையில், 1லட்சத்து 70 ஆயிரத்தை மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் மாவட்ட துணை செயலாளர் ஆனந்தமணி ஆகியோரிடம் கொடுத்தேன்.

ஆனால், அவர்கள் சொன்னபடி கட்சியின் தலைமை நிர்வாகிகள் யாரையும் எனது மகன் திருமணத்திற்கு அழைத்து வரவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதையும், எனது பணம் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பறிபோனதையும் அறிந்து மன உளைச்சலுக்கு ஆளானேன். எனவே மேற்கண்ட இருவரிடமும் பணத்தை திருப்பி கேட்ட பொழுது மூன்று மாதம் கால அவகாசம் கேட்டார்கள்.
அதனை தொடர்ந்து, கால அவகாசம் முடிந்த பின்னர் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் ஆனந்தமணி ஆகியோரிடம் என்னோடு சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் கட்சி அலுவலகத்துக்கு சென்று பணத்தை திரும்ப கேட்டபோது அவர்கள் இருவரும், எனது சாதி பெயரை அவதூறாக சொல்லி திட்டி, கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்து, என்னை அடித்து கீழே தள்ளி விட்டனர். இதில் எனக்கு எனது காலில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன்.
எனவே, என்னிடம் பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றி, தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசி என்னை தாக்கியதுடன், எனது சாதி பெயரை சொல்லி மிகவும் இழிவாகப் பேசிய மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் மாவட்ட துணை செயலாளர் ஆனந்தமணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தர கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தேமுதிக முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் ப.கலைவாணன், நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, நெல்லை சந்திப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர் எம்.மதார்கான் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி செய்தியாளர் : செ.பா.தவசிக்கனி
