திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு பொன்னேரி, அனுப்பம்பட்டு, மீஞ்சூர், நந்தியம்பாக்கம், அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர் ஆகிய 6 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த அனைத்து ரயில் நிலையங்களும் சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளதால், இங்கு அதிக அளவில் ரயில் பயணிகள் இந்த ரயில் நிலையங்களில் இருந்து ஒரு மார்க்கத்தின் வழியாக சென்னைக்கும், மறுப்புரம் மார்க்கத்தின் வழியாக ஆந்திர மாநில பகுதிகளுக்கும் சென்று வருவது வழக்கம்.
இந்த ரயில் நிலையங்களுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கும்முடிபூண்டி, சூலூர்பேட்டை, நெல்லூர் ஆகிய ரயில் நிலையங்கள் வரை மின்சார பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன.


இந்த அனைத்து புறநகர் பயணிகள் ரயில்களும், பொன்னேரி ரயில் நிலையம் வழியாக சென்று வருகின்றன. இந்த ரயில்களில் சென்னை சென்ட்ரல் மார்க்கத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வரக்கூடிய பயணிகள் ரயில்கள் அனைத்தும், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பொன்னேரி இரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் வந்து சென்று கொண்டிருந்தன. இரண்டாவது நடை மேடையில் அதிவேக ரயில்களும் சரக்கு ரயில்களும் செல்வது வழக்கம். அதேபோல், மூன்றாவது நடை மேடையில் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லக்கூடிய ரயில்கள் அனைத்தும் வந்து செல்லும், நான்காவது நடைமேடையில் பெரும்பாலும் எந்த ரயில்களும் செல்வதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தது. தேவைப்பட்டால் இரண்டு மூன்று நாட்கள் நின்று செல்ல வேண்டிய சரக்கு ரயில்கள் அந்த நடைமேடையில் நிறுத்தி வைப்பது வழக்கம். மூன்றாவது மற்றும் நான்காவது நடை மேடைக்கு நடுவே ஒரு ரயில் பாதை இருக்கும் அதில், ஆந்திர மாநில பகுதியில் இருந்து சென்னை நோக்கி செல்லக்கூடிய அதிவிரைவு ரயில்கள் செல்வது வழக்கம்.


இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து முதல் நடைமேடையில், சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வந்து சென்று கொண்டிருந்த புறநகர் ரயில்கள், இரண்டாவது நடைமேடையில் வந்து செல்லும் வகையில் மாற்றப்பட்டது. அப்போதே பொன்னேரி பகுதி ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும், ரயில்வே நிர்வாகத்திடம், கும்மிடிப்பூண்டி செல்லக்கூடிய புறநகர் ரயில்கள் முதலாவது நடை மேடையிலேயே வந்து செல்ல வேண்டும் எனவும், இரண்டாவது நடைமேடையில் வந்து செல்வதால் பெண்களும், வயதான முதியவர்களும் முதலாவது நடைமேடைக்கு வந்து பின்னர், ரயில் நிலையத்திலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. அதனால் ரயில் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் எனவும்,
முதல் நடைமேடை எதற்கும் பயன்படாமல் இருக்கக்கூடிய சூழ்நிலை இருந்து வருகிறது. ஆகவே, எப்போதும் போல் புறநகர் ரயில்கள் முதலாவது நடை மேடையிலேயே வந்து செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.ஆனால், ரயில்வே நிர்வாக அதிகாரிகள் பொதுமக்களின் இந்த மனக்குமுறலை காதில் கூட வாங்கிக் கொள்ளாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில், இப்போது சமீப காலமாக ரயில்வே நிர்வாக அதிகாரிகள் செயல்படக்கூடிய விதம், பொன்னேரி பகுதி ரயில் பயணிகளையும், பொதுமக்களையும், மிகவும் கொதிப்படைய செய்திருக்கிறது. மேலும், பெரும்பாலானவர்கள் புறநகர் ரயில் பயணத்தையே புறக்கணிக்க கூடிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதற்கு காரணம், பொன்னேரி ரயில் நிலையத்தில் மூன்றாவது நடைமேடையில், வந்து செல்ல வேண்டிய கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் மார்க்கமாக செல்லக்கூடிய பெரும்பாலமான புறநகர் ரயில்களை, திடீர், திடீரென நான்காவது நடைமேடைக்கு மாற்றி விடுகின்றனர்.

மூன்றாவது நடைமேடையில் சென்னையில் இருந்து கும்முடிபூண்டி செல்லக்கூடிய பயணிகள் ரயிலை நிறுத்திவிட்டு, இரண்டாவது நடைமேடையில் சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய அதிவிரைவு ரயில்களை இயக்குகின்றனர். அந்த விரைவு ரயில் சென்ற பிறகு மூன்றாவது நடைமேடையில் இருக்கக்கூடிய மின்சார புறநகர் ரயில்களை இயக்குகின்றனர். அப்போது, மூன்றாவது நடைமேடையில், சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயிலை, முதல் மேடையில் நிறுத்தலாமே, என ரயில் பயணிகள் வேதனை அடைகின்றனர். மேலும், சென்னை செல்லக்கூடிய பயணிகள் மூன்றாவது நடைமேடையில் நிற்பது கும்மிடிப்பூண்டி ரயில் என தெரியாமல் அவசர, அவசரமாக ஏறி விடுகின்றனர். பின்னர், சிறிது நேரத்திற்கு பிறகு, அந்த ரயில் கும்மிடிப்பூண்டி மார்க்கமாக எதிர் திசையில் புறப்பட்டு செல்லும்போது, அவசரக் கதியில், அவர்கள் பதட்டத்தில் ரயிலில் இருந்து இறங்க முயற்சி செய்து விபத்துகளும் நடைபெறுகிறது.

மேலும், மூன்றாவது நடைமேடையில் சென்னை செல்வதற்காக காத்திருக்க கூடிய பயணிகள் அவசர, அவசரமாக ஒலிபெருக்கியின் மூலம் நான்காவது நடைமேடைக்கு செல்லுமாறு அறிவிப்பு செய்யப்படுகிறது. அதன் பிறகு நான்காவது நடைமேடைக்கு பயணிகள் பதட்டத்துடன் படியேறி செல்கின்றனர். அப்படி மாடிப்படி ஏறி செல்வதற்கு பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர்.
அப்படி செல்லக்கூடியவர்கள், இறங்கி நான்காவது நடை மேடைக்கு செல்வதற்குள் அந்த நடைமுறைக்கு வரக்கூடிய மின்சார ரயில் நின்று, புறப்பட்டு விடுகிறது. அப்போது பலர் அவசர, அவசரமாக ஓடும் ரயிலில் ஏறுவதும், ஒரு சிலர் இப்படி ஏறுவதை தவிர்த்து விட்டு திரும்பவும் மாடிப்படி ஏறி அடுத்த ரயிலுக்காக மூன்றாவது நடைமேடைக்கு திரும்பவும் வரக்கூடிய சூழ்நிலையும் நிலவுகிறது. இப்படி ரயில்வே நிர்வாகம் பொன்னேரி பயணிகளை மிகவும் சிரமப்பட வைக்கும் செயல், பொன்னேரி பயணிகள் இடையே கொதிப்படைய செய்திருக்கிறது.

மேலும், ரயில் பயணிகளின் வசதிகளை ரயில்வே நிர்வாகம் சரிவர செய்து கொடுக்காதது மட்டுமில்லாமல், ரயில் பயணிகளுடைய உயிருடன் விளையாடக்கூடிய விபரீத விளையாட்டையும் ரயில்வே நிர்வாகம் அரங்கேற்றி வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெரும்பாலமான மக்கள் பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து ரயிலின் மார்க்கமாக சென்னைக்கு செல்வதையே விட்டு, விட்டு பேருந்து மூலமாக சென்னை செல்வதை பழகி கொள்ள தயாராகி விட்டனர்.

பொன்னேரி மற்றும் பொன்னேரியை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து சென்னைக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவ – மாணவிகளும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய அலுவலர்கள், மற்றும் தினக்கூலிகளாக ரயிலில் பயணிக்க கூடிய கூலித் தொழிலாளர்களும், வியாபாரிகளும், விவசாயிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக கூடிய சூழ்நிலை இருந்து வருகிறது. பொன்னேரி பகுதி மக்களை ரயில்வே நிர்வாகம் இப்படி அவதிப்பட செய்வதை, திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் கருத்தில் கொண்டு மக்களின் இந்த முக்கிய பிரச்சனைகளில் தலையிட்டு, இதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்தி கொடுத்தால் பொன்னேரி பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். இல்லையென்றால், கூடிய விரைவில் ரயில் மறியல் போராட்டம் செய்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

செய்திகள் ; P.G.பாலகிருஷ்ணன் எதிரொலி / 8939476777
