பிளம்பிங் தொழிலாளர்கள் 4 பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சாவு!
மாமல்லபுரத்தில் போர் போடுவதற்காக 40 அடி ஆழ ஆழ்துளை கிணறு தோண்டி முடிக்கும்போது, 40 அடி உயர இரும்பு குழாய் மேலே தூக்கிய போது உயர்அழுத்த மின் கம்பியில் குழாய் உரசியதால், பிளம்பிங் தொழிலாளர்கள் 4 பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் குடி தண்ணீர் பிரச்சனைக்காக, கையால் போர் போடுவதற்காக 40 அடி உயர ஆழ்துளை கிணறு தோண்டும் பணி இன்று நடந்தது. 5 பிளம்பிங் தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். 40 அடி ஆழத்தில் ஆழ்துளை தோண்டும் பணி முடிந்தவுடன் 40 அடி உயர மண் தோண்டும் இரும்பு குழாயை 5 பிளம்பிங் தொழிலாளர்கள் ஒன்றாக சேர்ந்து மேலே தூக்கினர்.

அப்போது அந்த இரும்பு குழாய் எதிர்பாராத விதமாக அங்குள்ள உயர்அழுத்த கம்பி மீது உரசியதில் 5 தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர். அதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உடலில் மின்சாரம் தாக்கி இறந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.

இதில், பிளம்பிங் தொழிலாளர்களான நெய்குப்பியை சேர்ந்த பிரபு(வயது33), வசந்தபுரியை சேர்ந்த பாலாஜி (வயது20), மாமல்லபுரத்தை சேர்ந்த பாட்சாபாய் (வயது35), கடம்பாடியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது55) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயமடைந்த காரணையை சேர்ந்த பரசுராமன்(33) செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இறந்த பிளம்பிங் தொழிலாளர்கள் 4 பேரின் உடல்களை உயர்அழுத்த மின்சாரத்தை நிறுத்தி, மீட்ட மாமல்லபுரம் போலீசார் செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. அய்மல் ஜமால், மாமல்லபுரம் டி.எஸ்.பி. அறிவழகன், திருப்போரூர் எம்.எல்.ஏ. விஜயராஜ், செங்கல்பட்டு கோட்டாச்சியர் பாலாஜி, ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

போர்வெல் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளிகள் நான்கு பேர் உயிரிழந்தது இப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

செய்திகள் ; லக்ஷ்மிகாந்தன் எதிரொலி / 8939476777
