மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி பகுதியில் நீண்ட நாளாக நிலவும் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து, பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சீரான குடிநீர் விநியோகம் இல்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பலமுறை புகார் அளித்தும் ​தங்களுக்குக் குடிநீர் கிடைக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், இன்று காலை திரண்டு வந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சாலையின் நடுவே காலி குடங்களை அடுக்கி வைத்து, தங்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.

​இந்தச் சாலை மறியல் காரணமாக அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலங்காநல்லூர் காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். இருப்பினும், எங்களுக்குத் தற்காலிக தீர்வு மட்டும் போதாது குடிநீர் வழங்கும் முறையில் நிரந்தர மாற்றம் வேண்டும் என்று வலியுறுத்தி, அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்பதில் கிராம மக்கள் பிடிவாதமாக உள்ளனர். முடுவார்பட்டி கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *