நெடுஞ்சாலை துறை 7 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவு, ஒரு கிராமத்தில் மட்டும் இழப்பீடு வழங்கும் பணிகள் முடிந்தவுடன் மாற்றுச் சாலைப் பணிகள் நிறைவு பெற்றவுடன் விரைவில் விமான ஓடுதள பணிகள் முடிக்கப்படும்- மதுரை விமான நிலையம் இயக்குனர் முத்துக்குமார் பேட்டி.
மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) சார்பில், பயணிகளின் வசதிகளை மேம்படுத்தவும், சமூகப் பொறுப்புணர்வை ஊக்குவிக்கவும், ஜூன் 15 ஆம் தேதி ‘யாத்ரி சுவிதா திவாஸ்’ சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பின் போது, விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் விமான நிலைய விரிவாக்கம், இரவு நேர விமான சேவைகள், கார்கோ வசதிகள், டாக்ஸி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கமளித்தார்.
மதுரை விமான நிலையத்தில் தற்போது பெரும்பாலும் அழுகக்கூடிய பொருட்களே கார்கோ மூலம் கையாளப்படுவதாகவும், அதோடு புனே உள்ளிட்ட நகரங்களுக்கு ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் அனுப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.
விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பாக பேசிய அவர், பல ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரின் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும். சமீபத்தில் நீர்வளத் துறையால் வெளியிடப்பட்ட அரசாணை முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளதாகவும், திட்டத்திற்குத் தேவையான குளப் பகுதிகள் தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த கட்டத்தில் தெளிவாகும் என்றும் தெரிவித்தார்.
இரவு நேர விமான சேவைகள் குறித்து பல விமான நிறுவனங்கள் முன்பு ஆர்வம் தெரிவித்திருந்தாலும், 24 மணி நேரம் சேவைகள் தொடங்கப்பட்ட பிறகு இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்றார். குறிப்பாக, முக்கிய ஆபரேட்டரான இண்டிகோ நிறுவனத்திடமிருந்தும் இதுவரை புதிய முன்மொழிவுகள் வரவில்லை எனக் கூறினார்.
தற்போது மதுரை விமான நிலையத்தில் தினமும் 18 உள்நாட்டு விமான சேவை, சர்வதேச சேவைகளில் தற்போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மட்டும் தினசரி சேவை இயக்கப்படுவதாக தெரிவித்தார்.
விமான நிலையத்தில் டாக்ஸி, பார்க்கிங் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்றும், இந்திய விமான நிலைய ஆணையத்தின் கட்டணங்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாகவே உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், விமானங்களை இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கும் வசதிகள் மதுரை விமான நிலையத்தில் இருப்பதாகவும், 12 விமான நிறுத்துமிடங்கள், 3 ஏரோபிரிட்ஜ்கள் மற்றும் 2 ஹெலிகாப்டர்களுக்கான தனி நிறுத்துமிடங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
போர் காரணமாக வளைகுடா நாடுகளுக்கான சேவைகள் குறித்து பேசிய அவர், அபுதாபி மற்றும் துபாய் விமான சேவைகள் கடந்த பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் தொடக்கத்தில் நிறுத்தப்பட்டதாகவும், அவை மீண்டும் தொடங்கப்படாதது மதுரை விமான நிலையத்திற்கு பெரிய இழப்பாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஓடுபாதை விரிவாக்கப் பணிகள் தொடர்பாக 31.3 கிலோமீட்டர் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள 2.37 கிலோமீட்டர் பணிகளுக்காக நெடுஞ்சாலை மூடி மாற்றுச் சாலைகள் அமைக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து மாநில அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
மாநில நெடுஞ்சாலை 7 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியிருந்த நிலையில், 6 கிராமங்களில் பணிகள் முடிந்துள்ளதாகவும், மீதமுள்ள ஒரு கிராமத்தில் இழப்பீடு வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அவை முடிந்தவுடன் 8 மாதங்களுக்குள் மாற்றுச் சாலைப் பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.
விமான நிலைய நஷ்டம் குறைந்துள்ளதற்கான முக்கிய காரணமாக பயனர் மேம்பாட்டுக் கட்டணம் (UDF) உயர்த்தப்பட்டதையும், பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததையும் சுட்டிக்காட்டிய அவர், இறுதி நிதி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே துல்லியமான விவரங்கள் வெளியாகும் என்றார்.
டாக்ஸி சேவைகள் குறித்து பேசிய அவர், தற்போது WTI மற்றும் ரெட் டாக்ஸி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், உபர் நிறுவனம் மதுரை விமான நிலையத்துடன் ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டியுள்ளதாகவும் தெரிவித்தார். ரேபிடோ சேவையும் தற்போது கிடைக்கிறது என்றும், ஓலா நிறுவனம் இதுவரை விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.
கார்கோ சேவையை மேம்படுத்தும் நோக்கில் புதிய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் 3 முதல் 4 மாதங்களுக்குள் உள்நாட்டு கார்கோ வசதிகளின் விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் என்றும் மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் தெரிவித்தார்.
செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777
