பெருத்த சத்தத்துடன் வெடித்த குண்டில் இருந்து 100 அடி உயரத்திற்கு புகை மண்டலம் கிளம்பியது.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே கடந்த 18 ம் தேதி கடலில் மீன் பிடிக்க சென்ற பசியாவரத்தை சேர்ந்த மீனவர் தேவ பிரகாஷ்(35) மீன் பிடித்த போது 1.5 அடி உயரமும், 15 கிலோ எடையும் கொண்ட வெடிகுண்டு கிடைத்தது.
இதனையடுத்து திருப்பாலைவனம் காவல் துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலையடுத்து அந்த குண்டை மீட்டு காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு நேரில் சோதனை செய்த போது அது பீரங்கிக்கு பயன்படுத்தபட்ட வெடிகுண்டு என தெரிய வந்தது.
பின்னர், திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு வந்தது. இன்று அந்த வெடிகுண்டை வெடிகுண்டு நிபுணர்கள் திருப்பாலைவனம் அருகே உள்ள ஏரியில் வைத்து செயல் இழக்க செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

திருப்பாலைவனம் பொறுப்பு காவல் ஆய்வாளர் ராஜாகுமார் தலைமையில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், காவல் உதவி ஆய்வாளர் மனோவா செபாஸ்டின், மருதம் கமாண்டோ ஃபோர்ஸ், பொன்னேரி தீயணைப்பு துறை அலுவலர் பரசுராமன், டாக்டர் ரமேஷ் மற்றும் பொன்னேரி அரசு மருத்துவமனை மருத்துவ குழு பழவேற்காடு அவசர சிகிச்சை ஊர்தி, உளவுத்துறை அதிகாரிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
பின்னர் குண்டு வெடிக்கும் போது பெருத்த சத்தத்துடன் 100 மீட்டர் உயரத்திற்கு புகை மண்டலம் கிளம்பியது. வெற்றிகரமாக வெடிகுண்டை செயல் இழக்க செய்த பின் அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பினர்.
செய்திகள் ; பழவை முத்து/ எதிரொலி / 8939476777

