விஷசாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்கும் போது, போராடி உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்திற்கு இழப்பீடு கொடுக்கலாமே…

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமையில் கூட்டமைப்பில் இருக்கக்கூடிய பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தொடர்ந்து பல நாட்களாக போராடிவரும் இவர்களுக்கு ஆதரவாக தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், மேட்டூர் சட்டமன்ற தொகுதியின் பாமக கட்சியின் எம்எல்ஏவான சதாசிவம், பணி நிரந்தரம் கேட்டு போராடிவரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்.

மேலும், அவர் தமிழக முதல்வர் அவர்களுக்கு வைத்திருக்கும் கோரிக்கையில், தமிழக அரசின் கீழ் இயங்க கூடிய பள்ளி கல்வித்துறையில் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்ற கூடிய உடற்கல்வி மற்றும் ஓவியம், தொழில் கல்வி போன்ற துறைகளின் கீழ் கடந்த 2012 ம் ஆண்டில் இருந்து மிகவும் குறைந்த ஊதியமான 12,500 சம்பளத்தில் அவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர்.

தாங்கள் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது, தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி அவர்களை கடந்த 5 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யாத காரணத்தினால், அவர்கள் தொடர் போராட்டத்தில் குதித்தனர்.
இதற்கிடையே, தாங்கள் அவர்களுடைய சம்பளத்தை 2,500 ரூபாய் உயர்த்தி கொடுப்பதாக அறிவித்திருக்கிறீர்கள். அது அவர்களுக்கு போதியதாக இருக்கவில்லை.

ஆகவே, கடந்த 15 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை, தமிழக அரசு வேறு அரசு துறையில் காலியாக உள்ள பணிகளில் நிரப்பி, அதன் மூலம் ஆயிரகணக்கான பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மாற்றி அமைத்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கோரியிருக்கிறார்.

மேலும், அவருடைய தொடர் போராட்டத்தின் போது போலீசாரால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெரம்பலூரை சேர்ந்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் என்பவர் தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைந்தது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்திருக்கிறது. தமிழக முதல்வர் அவர்கள் கண்ணன் அவர்களுடைய குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கியும், அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார்.

செய்தியாளர் : ஆர். குமார்
