மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள கருமாத்தூரை சேர்ந்தவர் ராஜகுரு.(27) நேற்று இரவு அவரது அண்ணன்- அவரது மனைவி ஆகியோர் வெளியே சென்று விட்டனர். இந்த நிலையில், அவரது அண்ணன் மகள் பிரமிளாஸ்ரீக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த ராஜகுரு பிரமிளாஸ்ரீயையும், உதவிக்காக அவரது வீட்டின் அருகே உள்ள சங்கீதாவையும் அழைத்து கொண்டு
மருத்துவமனைக்கு செல்வதற்காக ராஜகுருவுக்கு சொந்தமான இரண்டு சக்கர வாகனத்தில் மூன்று பேரும் மதுரை- தேனி மெயின் ரோட்டில் சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக ராஜகுரு சென்ற இரண்டு சக்கர வாகனம் மீது மோதியதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், பலத்த காயமடைந்த ராஜகுரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பிரமிளாஸ்ரீ, சங்கீதா ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த செக்கானூரணி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த ராஜகுரு உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கும், படுகாயமடைந்த பிரமிளாஸ்ரீயையும் சங்கீதாவையும் மீட்டு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று பிரமிளா ஸ்ரீ சங்கீதா இருவரும் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து, ராஜகுரு மனைவி கௌசல்யா செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் குறவகுடியை சேர்ந்த பாண்டி (43) என்பரை தேடி வருகின்றனர்.

மதுரை செய்தியாளர் : காளமேகம் / எதிரொலி / 8939476777
