சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாவை முன்னிட்டு, கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து தங்களது 41 நாள் கடுமையான விரதத்தைத் தொடங்கினர்.

ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதற்காக கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி பக்தர்கள் மாலை அணிந்து, ஒரு மண்டலம் (41 நாட்கள்) கடுமையான விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு யாத்திரை செல்வது வழக்கம். அந்த வகையில், ஆன்மீக நகரமான மதுரையில் கார்த்திகை முதல் நாளான இன்று அதிகாலை முதலே ஆன்மீகக் களைகட்டியது.

மதுரை மேலமாசி வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவர் ஐயப்பனுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர்.
முதன்முறையாக சபரிமலைக்குச் செல்லும் ‘கன்னி சாமிகள்’ முதல் பல ஆண்டுகளாக மலைக்குச் சென்று வரும் மூத்த பக்தர்கள் வரை, தங்களது குருசாமிகளின் திருக்கரங்களால் துளசி மற்றும் ருத்ராட்ச மாலைகளை அணிந்து கொண்டனர். பெரியவர்கள் மட்டுமின்றி ஏராளமான சிறுவர்களும் மிகுந்த உற்சாகத்துடன் மாலை அணிந்து கொண்டதைக் காண முடிந்தது.

பக்தர்கள் மாலை அணிந்தபோது கோவில் வளாகம் முழுவதும் எழுப்பப்பட்ட “சுவாமியே சரணம் ஐயப்பா” என்ற பக்தி பரவசமூட்டும் சரண கோஷம் விண்ணைப் பிளந்தது. மாலை அணிந்த பக்தர்கள் இன்று முதல் கருப்பு, நீலம் மற்றும் காவி நிற ஆடைகளை அணிந்து, இருவேளை நீராடி, சரண கோஷம் பாடி தங்களது மண்டல விரதத்தை மேற்கொள்ள உள்ளனர்.

பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால், கூட்ட நெரிசலைத் தவிர்த்து அனைவரும் எளிதாகச் சுவாமி தரிசனம் செய்யவும், மாலை அணியவும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலமாசி வீதி ஐயப்பன் கோவிலைத் தொடர்ந்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் நகரின் பல்வேறு கோவில்களிலும் இன்று காலை முதலே பக்தர்கள் திரளாக மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed