சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மன்னர் மருது பாண்டியரின் நினைவிடம் அமைந்துள்ளது. இந்த நினைவிடத்தில் ஆண்டுதோறும் மருது பாண்டியர்களின் நினைவு தினம் மற்றும் குருபூஜை விழா சிறப்பாக நடைபெறுவது போல் இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக மாமன்னர் மருதுபாண்டியர் நல அறக்கட்டளையின் சார்பில் அதன் தலைவர் பெமினா நாகராஜன் மற்றும் கௌரவத் தலைவர் பழனிக்குமார் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் புனித நீர் ஊர்வலமாக எடுத்து வந்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

பின்னர் இந்த அறக்கட்டளையின் சார்பில் மலர் வளையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குழந்தைராணி நாச்சியார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசசேதுபதி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுச் செயலாளர் சீனிவாசன் கட்சி நிர்வாகிகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். இதேபோல் அதிமுக திமுக கட்சி நிர்வாகிகளும் சமுதாயத் தலைவர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

செய்திகள் : ஆனந்த் / எதிரொலி
