கடந்த தி.மு.க. ஆட்சியில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.20 கோடி ஊழல் ?நடைபெற்றுள்ளதாகவும், அது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்காமல் த.வெ.க. அரசு மௌனம் காப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
110 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில், சுமார் 20 கோடி ரூபாய் அளவுக்கு மிகப்பெரிய நிதி முறைகேடு நடந்துள்ளதாக வங்கியின் பெண் ஊழியரே பகீர் கிளப்பும் ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ள சம்பவம், கூட்டுறவுத் துறையில் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 89 தொடக்க கூட்டுறவு சங்கங்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 122 சங்கங்கள் என மொத்தம் 264 சங்கங்களுக்கு நிதி அளிக்கும் தாய் வங்கி தான் இந்த காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி. லட்சக்கணக்கான விவசாயிகள், வைப்புதாரர்கள், பொதுமக்களின் பணம் இங்கு தான் உள்ளது.

இந்த வங்கியில் பணியாற்றி இறந்துபோன சஞ்ஜீவி சர்மா என்பவரின் மகன் வி.பவன்குமார், கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளராக சேர்க்கப்பட்டவர். படிப்படியாக விவசாய மேலாளர் பதவிக்கு வந்த அவர், தற்போது 264 – சங்கங்களின் மொத்த கட்டுப்பாட்டையும் தன் கையில் வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. மிகுந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சிபிஎஸ் மென்பொருளில், யாருக்கும் தெரியாத நூதன முறையில் பல கோடி ரூபாயை கையாடல் செய்துள்ளதாகவும், 18% வட்டியுடன் பணத்தை திருப்பி செலுத்தியதாக நாடகமாடியதாகவும் புகார் கூறுகிறது.

இந்த முறைகேடுகளை கண்டுபிடித்து ஆய்வுக்கு வந்த நபார்டு வங்கி (தேசிய வேளாண் வங்கி) தனது ஆய்வு அறிக்கையில், “பவன்குமார் போன்றவர்களை பணம் சம்பந்தப்பட்ட முக்கிய பதவிகளில் நியமிக்க கூடாது, முக்கியமற்ற பதவியில் தான் போட வேண்டும்,” என வெளிப்படையாகவே எச்சரித்துள்ளது.
ஆனால், வங்கியின் மேலாண்மை இயக்குனராக உள்ள கூடுதல் பதிவாளர், இந்த எச்சரிக்கையை காற்றில் பறக்கவிட்டு, எங்கு முகாம் சென்றாலும் பவன்குமாரை அழைத்து சென்றதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் வங்கியின் மற்றொரு உதவியாளர் எல்லப்பன் என்பவரின் அடையாள குறியீட்டை அவருக்கே தெரியாமல் பயன்படுத்தி பவன்குமார் மோசடி செய்ததாக எல்லப்பன் தலைமை அலுவலகத்திற்கு மெயில் மூலம் புகார் அனுப்பியும், இதுவரை எந்த சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காமல் மூடி மறைப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் பொது மேலாளர் கே. தனபால் (பொ), தனது வாட்ஸ்அப் மூலம் மேலாண்மை இயக்குநருக்கு நேரடியாக அறிக்கை அனுப்பி, “இந்த பிரிவில் பவன்குமார் வேண்டாம்,” என எச்சரித்துள்ளார்.இதுதொடர்பாக ஏற்கனவே வரலட்சுமி என்பவர் கொடுத்துள்ள கடிதத்தில், “02.-12-.2025 மாலைக்குள் பவன்குமார் அடித்த கொள்ளையின் முழு விவரத்தை காவல்துறை, நபார்டு வங்கி, ரிசர்வ் வங்கி, கூட்டுறவு பதிவாளர், அரசு செயலாளர் ஆகியோருக்கு உண்மை அறிக்கையாக புகார் அளிக்க வேண்டும். இல்லையெனில் என்னிடம் உள்ள ஆதாரங்களுடன் அனைத்து மீடியாக்களுக்கும் தகவல் தெரிவிப்பேன். நீங்கள் கொடுக்கும் புகாரில் தொகை குறைவாக இருந்தால், குற்றவாளிகள் பவன்குமாரும், சிவமலரும் தான் என்பதை உயர்நீதிமன்றம் மூலம் நிரூபிக்க ஆவணங்கள் தயாராக உள்ளது” என பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இருப்பினும் கடந்த தி.மு.க. ஆட்சியில் இந்த முறைகேடு தொடர்பாக மேற்கொண்டு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு ஆட்சிக்கு வந்து 5 மாதங்களை கடந்தும் இந்த விவகாரத்தில் துளியும் ஆர்வம் காட்டவில்லை. இதிலிருந்து தி.மு.க.வும், த.வெ.க.வும் தங்களுக்குள் மறைமுக கூட்டணி வைத்து இயங்குகின்றனவோ என்கிற சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை.
ஆட்சிக்கு எதிரான விஷயங்களை திசைதிருப்ப மட்டும் அவ்வப்போது வழக்கு, கைது என்று சில நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டு அதன்பிறகு தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று ஊழல்கள், முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் ஆட்சியை நடத்தவே த.வெ.க. அரசு விரும்புகிறது என்றுதான் இந்த ஆட்சியின் செயல்பாடுகள் உணர்த்துகின்றன.

அதை நிரூபிக்கும் வகையில் தான், தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி நிதி மோசடி விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்காமல் த.வெ.க. அரசு மௌனம் காப்பதும் த.வெ.க.& தி.மு.க. மறைமுக கூட்டணி அமைந்துள்ளதை உறுதிபடுத்துவது போலவே உள்ளன.
இதனால் காஞ்சிபுரம் கூட்டுறவு வட்டாரத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறதும். மேலும் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

செய்திகள் : P.G. பாலகிருஷ்ணன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed