
தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்/மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவர், மாணவியர்களின் நலன், பள்ளி வருகை , கல்வி கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் பள்ளி நாட்களில் மாணாக்கர்களுக்கு தினமும் சத்தான, தரமான , சுவையான காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
காலை உணவு திட்டத்தின் மூலம் ஏற்கனவே 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவியர்களும் தங்களுக்கும் இதுபோன்ற " சத்தான காலை உணவு எப்போது கிடைக்கும் ? " என்ற எதிர்பார்ப்புடன் இருந்தனர். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், இத்திட்டம் தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவியர்களுக்காக 370 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஊரகப் பகுதிகளில் 328 பள்ளிகளும், நகர்ப்புறப் பகுதிகளில் 42 பள்ளிகளும் உள்ளன. இப்பள்ளிகளில் பயிலும் 33,093 மாணவர், மாணவியர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை பள்ளி நாட்களில் தினமும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் மாவட்ட அளவில், ஊரக , நகர்ப்புற பகுதிகளில் உள்ள 1,120 பள்ளிகளில் 47,174 மாணவர், மாணவியர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். ஊரகப் பகுதிகளில் உள்ள 1,053 பள்ளிகளிலும், பள்ளி வளாகங்களில் அமைந்துள்ள 67 ஒருங்கிணைந்த சமையல் கூடங்களிலும் உணவு தயாரிக்கப்பட்டு மாணவர் - மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளி மாணாக்கர்களுக்கு சத்தான உணவு வழங்குவதுடன், உணவு வகைகளில் பல்வகைத் தன்மையையும் ஏற்படுத்தும் வகையில் வாரந்தோறும் மாறுபட்ட உணவுகள் சுழற்சி முறையில் வழங்கப்படுகின்றன.
திங்கள் கிழமை வெண்பொங்கல் , காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை ரவா கிச்சடி , காய்கறி சாம்பார், புதன்கிழமை வெண்பொங்கல் , காய்கறி சாம்பார், வியாழக்கிழமை கோதுமை ரவா உப்புமா , காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை சேமியா கிச்சடி , காய்கறி சாம்பார் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனால், மாணவர், மாணவியர்களுக்கு பள்ளியிலேயே சத்தான , சுவையான காலை உணவு கிடைப்பதுடன், அவர்கள் காலை உணவை உட்கொண்டு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்துவதற்கும், பள்ளிக்கு வருகை தருவதற்கான ஆர்வத்தை அதிகரிப்பதற்கும் இத்திட்டம் உறுதுணையாக அமைந்துள்ளது.
மேலும், மாணவர் - மாணவியர்களின் கல்வி கற்கும் திறனை மேம்படுத்தும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தில் பயனடைந்த மாணவி ஹரிணி தெரிவித்ததாவது :
எனது பெயர் ஹரிணி நான் புதுமடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறேன். எனது அம்மாவும், அப்பாவும் காலையிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால், எனக்கு காலை உணவு தயார் செய்து கொடுக்க முடியாத நிலையும் இருந்து வந்தது.
மேலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவியர்களுக்கு பள்ளியிலேயே சத்தான காலை உணவு பள்ளியிலேயே வழங்கப்படுவதைப் பார்த்தபோது, ” எங்களுக்கும் எப்போது இதுபோன்ற காலை உணவு கிடைக்கும்? ” என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எங்களுக்கும் இந்தத் திட்டம் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம்.
எங்களின் எதிர்பார்ப்பை அறிந்ததுபோல், சரியான நேரத்தில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவியர்களுக்கும் முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இத்திட்டம் மூலம் தற்போது பள்ளியிலேயே தினமும் சத்தான காலை உணவு கிடைப்பதால், காலையில் உணவு தயாராகுமா என்ற கவலையின்றி பள்ளிக்கு வர முடிகிறது.
காலை உணவு வகைகளில் ரவா உப்புமா, கோதுமை ரவா உப்புமா, வெண்பொங்கல் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் காய்கறி சாம்பாருடன் வழங்கப்படுகின்றன. உணவு சுவையாகவும், சத்தானதாகவும் , சுவையாக உள்ளது. தினமும் மாறுபட்ட உணவு வகைகள் வழங்கப்படுவதால், காலை உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிடுகிறோம். எனது அம்மாவும், அப்பாவும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில், எனக்காக காலையில் உணவு சமைத்து கொடுப்பதில் இருந்த சிரமத்தையும் இத்திட்டம் குறைத்துள்ளது. அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய நேரத்தில், எனக்கு பள்ளியிலேயே சத்தான காலை உணவு கிடைப்பதால், இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
மேலும் எங்களைப் போன்ற மாணவர் மாணவியர்களின் தேவையையும், குடும்பச் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, ஏற்கனவே 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்த காலை உணவுத் திட்டத்தை தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தி, எங்களுக்கும் பள்ளியிலேயே தினமும் சத்தான காலை உணவு கிடைக்க வழிவகை செய்து, மாணவர் – மாணவியர்களின் பசியைப் போக்குவதுடன், அவர்களுக்கு சத்தான, தரமான , சுவையான காலை உணவை வழங்கி, பள்ளி வருகை , கல்வி கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் விரிவாக்கம் மாணவர், மாணவியர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

எனவே இத்திட்டத்தை செயல்படுத்தி தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு என் சார்பிலும், என் குடும்பத்தின் சார்பிலும், என்னை போன்ற மாணவர், மாணவியர்கள் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
