இந்திரா கணேசன் சித்த மருத்துவக் கல்லூரி இந்திரா கணேசன் பிசியோதெரபி கல்லூரியுடன் திருச்சிராப்பள்ளி இந்திரா கணேசன் லயன்ஸ் சங்கம், திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம், திருச்சிராப்பள்ளி விஷன் லயன்ஸ் சங்கம், திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ராயல் லயன்ஸ் சங்கம், திருச்சிராப்பள்ளி மாத்தூர் லயன்ஸ் சங்கம் இணைந்து மேக்குடி பகுதியில் இலவச நீரிழிவு பரிசோதனை முகாமை நடத்தியது.
திருச்சிராப்பள்ளி இந்திரா கணேசன் லயன்ஸ் சங்கம் தலைவர் மருத்துவர் லதா தலைமை வகித்து பேசுகையில்,உலக நாடுகளில் நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முன்னணி இடங்களில் உள்ளது. ஒரு காலத்தில், நீரிழிவு நோய் என்பது பணக்காரர்கள், வயதானவர்கள் அல்லது நடுத்தர வயதினருக்கு மட்டுமே ஏற்படும் நோய் என்ற எண்ணம் நிலவியது. ஆனால், இன்று அந்தப் பார்வை முற்றிலும் மாறிவிட்டது. இளம் வயதினரும், இளைஞர்களும், குழந்தைகளும்கூட நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
நீரிழிவு நோய் முக்கியமாக ‘டைப் 1 மற்றும் ‘டைப் 2 என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. இது தவிர, முன் நீரிழிவு என்னும் ஃப்ரீடயாபட்டீஸ் மற்றும் கர்ப்பகால நீரிழிவு ஆகியவையும் உண்டு. இதில், டைப் 1 நீரிழிவு என்பது உடலில் இன்சுலின் சுரப்பு மிகவும் குறைவதாலோ அல்லது முற்றிலும் இல்லாமற் போவதாலோ ஏற்படும் தன்னுடல் தாக்க நோயாகும். இது பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு ஏற்படுகிறது. இருப்பினும், எந்த வயதிலும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வகை நீரிழிவுக்கு இன்சுலின் சிகிச்சை கட்டாயம் தேவைப்படும்.
ஐஇன்றைய சூழலில், கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்த பட்சம் ஒருவராவது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட காரணங்களால் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, பல குடும்பங்களில் மாதாந்திர செலவுத் திட்டத்தில் நீரிழிவு நோய்க்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைக்கென தனியாக ஒரு தொகையை ஒதுக்கும் நிலை உருவாகியுள்ளது. செலவினை சமாளிக்க முடியாமல் தவிக்கும் ஏழை பெற்றோர்களுக்கு உதவவும், இலவச மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறோம் என்றார்.
மருத்துவர்கள் சங்கீதா பாபி, நீலகண்டன், மருத்துவர் சுந்தர் அஹமத், நான்சி ஆக்னஸ் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு நீரிழிவு பரிசோதனையை மேற்கொண்டனர்.
மண்டலம் ஒன்றின் தலைவர் முகமது ஷபி, வட்டாரத் தலைவர் சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன்
செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், பொருளாளர் முகமது ஹயாஸ், மகேஸ்வரி, மலைக்கோட்டை ராயல் லயன்ஸ் சங்க தலைவர் ரகுபதி ராஜன், மாத்தூர் லயன்ஸ் சங்க தலைவர் குமார், செயலாளர் கௌதம் பிராங்கிளின் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.
செய்திகள் ; விஜயகுமார் / எதிரொலி / 8939476777
