விருதுநகர் – தென்காசி ரயில் வழித்தடத்தில் 100- வது ஆண்டில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மீட்டர் காலத்தில் இயங்கிய ரயில்கள் மற்றும் நிலையங்களை மீண்டும் கொண்டு வருவதுடன், இரட்டை ரயில் பாதையாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆங்கிலேயர் ஆட்சியில் சரக்கு போக்குவரத்து, தொழில் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டது. இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் சேவை 1853- ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி மும்பை – தானே இடையே இயக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து உணவு பொருட்களை கேரளா கொண்டு வரவும், அங்கிருந்து மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களை தமிழகம் கொண்டு செல்லும் நோக்கில் ரயில் பாதை அமைக்க திருவிதாங்கூர் சமஸ்தானம் மற்றும் மதராஸ் மாகாணம் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.

இதையடுத்து மேற்கு தொடர்ச்சி மலைகள் வழியாக மலைகளை குடைந்து 1902-ம் ஆண்டில் ரயில் பாதை அமைக்கப்பட்டு சரக்கு ரயில் சேவை தொடங்கியது. அதன்பின் 1904 முதல் கொல்லம் – சென்னை இடையே பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. இந்த ரயில் புனலூர், செங்கோட்டை, தென்காசி, கல்லிடைகுறிச்சி, திருநெல்வேலி வழியாக சென்னை சென்றதால் தூரம், பயண நேரம் அதிகமாக இருந்தது. பயண நேரத்தை குறைப்பதற்காக 1909-ம் ஆண்டு தென்காசி – விருதுநகர் இடையே ரயில் பாதை அமைக்க திட்டமிட்டு பணிகள் தொடங்கியது.

கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி வழியாக 122 கிலோ மீட்டர் தூரத்துக்கு கார்ட் லைன் மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டது. விருதுநர் – தென்காசி வழியாக 1927 ஜூன் 29 முதல் ரயில் சேவை தொடங்கியது. இவ்வழித்தடத்தில் கைக்காட்டி சிக்னல்கள், மனித சக்தியில் தண்டவாள மாற்றம், நீரேற்றம், கம்பிவழி டயலர் தொலைபேசிகள், எண்ணெய் விளக்கு மூலம் இயங்கும் சிக்னல்கள், டென்னிஸ் பேட் வடிவிலான பால் டோக்கன் முறை, நீராவி இன்ஜின் உடன் இயக்கப்பட்ட ரயிலில் மரக்கட்டை இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தது.

நீராவி இன்ஜினுக்கு பதில் டீசல் இன்ஜினுக்கு மாற்றப்படும், 75 ஆண்டுகளுக்கு மேலாக மீட்டர் கேஜ் பாதையாக இயங்கிய இந்த வழித்தடம், 2003- ம் ஆண்டில் விருதுநகர் – ராஜபாளையம் இடையேயும், 2004-ல் ராஜபாளையம் – தென்காசி இடையே அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. 2023- ம் ஆண்டு இவ்வழித்தடம் முழுவதும் மின்மயமாக்கபட்டு, அனைத்து ரயில்களும் மின்சார இன்ஜின் உடன் இயக்கப்பட்டு வருகிறது.

100- வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்த வழித்தடத்தில் தற்போது சென்னை – செங்கோட்டை
பொதிகை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை – தாம்பரம் சிலம்பு எக்ஸ்பிரஸ், சென்னை – கொல்லம் எக்ஸ்பிரஸ், செங்கோட்டை –
மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், மதுரை –
குருவாயூர் எக்ஸ்பிரஸ்,
செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில், எர்ணாகுளம் – வேளாங்கன்னி, சென்னை – திருவனந்தபுரம் இடையே ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இவ்வழி தடத்தில், மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கிய ரயில்கள் மற்றும் மூடப்பட்ட ரயில் நிலையங்களை மீண்டும் கொண்டு வருவதுடன், விருதுநகர் – செங்கோட்டை இடையே இரட்டை ரயில் பாதையாக மாற்ற ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில்:

தமிழகம் – கேரளாவை இணைக்கும் இந்த வழித்தடம் மூலம் புகழ்பெற்ற ஆன்மிக தளங்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் இணைக்கப்படுகிறது. இவ்வழித்தடதில் உள்ள விருதுநகர், ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர், தென்காசி ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மீட்டர் கேஜ் காலத்தில் மூடப்பட்ட கரிவலம்வந்தநல்லூர், சோழபுரம் ரயில் நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. செங்கோட்டை – புனலூர் மலை வழித்தடத்தில் மலை ரயில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் கண்ணாடி மேற்கூரை உடன் கூடிய விஸ்டாடோம் பெட்டி தெற்கு ரயில்வேயில் முதல் முறையாக மதுரை – குருவாயூர் ரயிலில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த வழியே மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கிய கொல்லம் – கோயம்புத்தூர், மதுரை – கொல்லம் ரயில்களை மீண்டும் இயக்குவதுடன் ஶ்ரீவில்லிபுத்தூர் – திருப்பதி, தென்காசி – பெங்களூர், தென்காசி – திருப்பூர் இடையே நேரடி ரயில் சேவை, மதுரை – செங்கோட்டை இடையே மெமு ரயில் சேவை தொடங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் ரயில்களை இயக்கும் வகையில் விருதுநகர் – தென்காசி வழித்தடத்தை இரட்டை ரயில் பாதையாக மாற்ற வேண்டும். தென்காசி – விருதுநகர் வழித்தட நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிறப்பு நூற்றாண்டு புதிய ரயில், நினைவு அஞ்சல் உறை, நினைவு நாணயம் வெளியிட வேண்டும்.

பழமையான ரயில்வே பொருட்கள் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். இவ்வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் கூடுதல் நடைமேடைகள் அமைத்து புதிய ரயில் முனையங்கள், புதிய சரக்கு முனையங்கள், நவீன தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும். தென்காசி மற்றும் ராஜபாளையம் ரயில் நிலையங்களை சிறிய முனையங்களாக மாற்ற வேண்டும், என்றனர்.

செய்திகள் : ராதாகிருஷ்ணன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed