பொருளாதாரச் சூழல் ஏழை மாணவர்களின் கல்விக் கனவுகளுக்கு தடையாக அமைந்துவிடக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில், படிப்பில் ஆர்வமும் திறமையும் கொண்ட ஏழை மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு யாதவ பண்பாட்டுக் கழகம் தொடர்ந்து கல்வி உதவிகளை வழங்கி ஊக்கப்படுத்தும் என அக்கழகத்தின் கௌரவத் தலைவர் எம்.பி. ஆதிகேசவன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பஞ்சுப்பேட்டை பெரிய தெருவில் அமைந்துள்ள திரௌபதியம்மன் ஆலய வளாக மண்டபத்தில், யாதவ பண்பாட்டுக் கழகம் சார்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட ஏழை மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வியைத் தொடர்வதற்கான கல்வி நிதி உதவி வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், மருத்துவக் கல்வி கனவுடன் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
விழாவில் யாதவ பண்பாட்டுக் கழகத்தின் கௌரவத் தலைவர் எம்.பி. ஆதிகேசவன் பேசுகையில், தமிழகத்திலேயே பள்ளி, கல்லூரிகள் அதிகம் நிறைந்த மாவட்டங்களில் காஞ்சிபுரம் மாவட்டமும் முக்கிய இடம் வகிக்கிறது. மீனாட்சி மருத்துவக் கல்லூரி தாளாளர் ராதாகிருஷ்ணன், பல்லவன் கல்லூரிக் குழுமத்தின் கல்விக் காவலர் போஸ், பில்லாபாங் இன்டர்நேஷனல் பள்ளியின் கல்வியாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கல்விச் சேவையில் ஈடுபட்டு வரும் பலரும் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

அவர்களைப் போலவே யாதவ பண்பாட்டுக் கழகமும் மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அவர்களின் எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்தவும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, படிப்பில் ஆர்வம் இருந்தும் பொருளாதார வசதியின்றி உயர்கல்வியைத் தொடர முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்களுக்கு உரிய கல்வி உதவிகளை வழங்கி, அவர்களின் கல்விக் கனவுகளை நனவாக்க உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மருத்துவர் எல்.பி. லாவண்யா பேசுகையில், மருத்துவத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற இலக்குடன் கல்வி பயின்று, தற்போது எம்.டி. மருத்துவப் படிப்பை நிறைவு செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டார். மாணவர்கள் தங்களுக்கான இலக்கை நிர்ணயித்து, நீட் தேர்வு மட்டுமின்றி டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்று வெற்றி பெறுவதற்குத் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்குத் தேவையான பொருளாதார உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் யாதவ பண்பாட்டுக் கழகம் வழங்கும் என்றும் தெரிவித்தார்.
செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி . இன் / 8939476777
