நெல்லை மாநகராட்சியின் சுகாதாரத்துறை செயல்படுகிறதா?
ம.நீ.ம. மேனாள் மாவட்டச் செயலாளர் கமலக்கண்ணன் கேள்வி?
மக்கள் நீதி மய்யத்தின் மேனாள் நெல்லை மாவட்டச் செயலாளர் எம் கமலக்கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. குறிப்பாக தூய யோவான் கல்லூரி பாளையங்கோட்டையின் அடையாளங்களில் ஒன்று ஆகும். இந்த கல்லூரியின் தென்புறம் காம்பவுண்ட் சுவரை ஒட்டி உள்ள சாலையில் அனைத்து வகையான தொற்று நோய்களையும் பரப்பும் குப்பைமேடு ஒன்று உள்ளது.

இந்த கல்லூரியின் தென்புறம் கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளி மற்றும் ஏஞ்சலோ மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியும், கீழ்புறம் தூய யோவான் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஒரு நர்சரி& தொடக்கப்பள்ளி ஆகிய 5 கல்வி நிறுவனங்கள் உள்ளன. மேலும் இந்த சாலை வழியாக தான் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நாள்தோறும் பயணிக்கின்றனர்.
“சுத்தம் சுகம் தரும், சுத்தம் சோறு போடும்” என்று கற்றுக் கொடுக்கின்ற கல்வி நிறுவனங்களுக்கு இடையே காணப்படும் இந்த அவல நிலையைக் கண்டுகொள்ளாத நெல்லை மாநகராட்சி அதிகாரிகளை என்ன சொல்ல? என்று பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.
மேற்கண்ட 5 கல்வி நிறுவனங்களுக்கு மத்தியில் காணப்படும் இந்த “குப்பைமேடு தான் தற்போது திருநெல்வேலி மாநகரத்தின் அடையாளமாகக் காணப்படுகிறது”. இதுகுறித்து நெல்லை மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு பலமுறை எடுத்துச் சொல்லியும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

திருநெல்வேலி மாநகராட்சியின் சுகாதாரத்துறை செயல்படுகிறதா? என்ற கேள்வி அனைத்து தரப்பு மக்களிடமும் ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டும் 5 கல்வி நிறுவனங்களுக்கு மத்தியில் உள்ள “ஒரு குப்பை மேட்டை கூட நெல்லை மாநகராட்சி நிருவாகத்தால்” அகற்ற முடியவில்லையே? என்ற ஏக்கம் இந்த வழியாக பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பலமுறை முறையிட்டும் இந்த குப்பை மேட்டை அகற்றாத திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் பாளையங்கோட்டை மண்டல அதிகாரிகள் மீது தமிழக அரசும், மாவட்ட நிருவாகமும், நெல்லை மாநகராட்சி ஆணையாளரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் நெல்லை மாவட்டச் செயலாளர் எம்.கமலக்கண்ணன் தமது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் செ.பா.தவசிக்கனி
எதிரொலி.இன் / நெல்லை.
கைபேசி எண்: 8825850212.
