உயர் அதிகாரிகளின் உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாமன்ற உறுப்பினர் ரா.கார்த்திக் வலியுறுத்தல்.
​

காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி விளம்பரப் பலகைகளை அமைத்துள்ளதால் மாநகராட்சிக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு காரணமான கடமை தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் 48-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், பணிகள் குழுத் தலைவருமான ரா.கார்த்திக் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

சம்பவம் குறித்து மாமன்ற உறுப்பினர் ரா.கார்த்திக் தெரிவித்ததாவது,

​காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்குள் வணிக ரீதியிலான விளம்பரப் பலகைகள் அமைக்க, A.மோகன் அபிகிரண் ஆட்ஸ், ஸ்ரீ ஜெயராம் பப்ளிசிட்டி, யூனிக் அட்வர்டைசிங், மோகன் ஆட்ஸ் , செவன் ஸ்டார் என்டர்பிரைசஸ் , சாய் சில்க்ஸ் கலாமந்திர், கிளவர் மீடியா, லாயல் ஆட்ஸ், ஆர் & டி மீடியா ,அட் 5 விஷன் ,ராயல் யூனிவர்சீஸ் வெப்நெட் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், இந்த நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி அளவுகள் மற்றும் நிபந்தனைகளை மீறி விளம்பரப் பலகைகளை அமைத்துள்ளன. இதனால் மாநகராட்சிக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் நிலவுகிறது.

​இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், மாமன்றக் கூட்டங்களில் குரல் எழுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆகியோர் , மாநகராட்சி ஆணையருக்குத் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

உயர் அதிகாரிகளின் உத்தரவு இருந்தபோதிலும், மாநகராட்சி ஆணையர் மற்றும் நகரமைப்பு அலுவலர் ரவீந்திரன், கணேசரங்கன், உதவி செயற்பொறியாளர்கள் சுபாஷ், மனோஜ் மற்றும் திவ்யா ஆகிய அதிகாரிகள் இதுவரை எந்தவித ஆய்வோ, நோட்டீஸோ அல்லது அபராத நடவடிக்கையோ எடுக்காமல் விதிமீறல் நிறுவனங்களுக்கு சாதகமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

அனுமதி மீறி அமைக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை சட்ட விதிகளின்படி உடனடியாக நேரடி ஆய்வு செய்ய வேண்டும். ஆட்சியர் மற்றும் DMA உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாமல் கடமை தவறிய மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமீறிய நிறுவனங்களிடமிருந்து நிலுவைக் கட்டணம் மற்றும் அபராதத் தொகையை உடனடியாக வசூலிக்க வேண்டும். சட்டவிரோதமாக வைக்கப்பட்ட அனைத்து விளம்பரப் பலகைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன் என ரா.கார்த்திக் தெரிவித்தார்.

செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் /எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed