அதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை எனப் பேசும் நிர்மல் குமார்… தவெகவின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறாரா? என ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்.
மின்சாரம் முதல் சிறைத்துறை வரை சர்ச்சைகள்… பதில் சொல்லும் அறிவிக்கப்படாத முதல்வர் நிர்மல் குமார் எனவும் கிண்டல்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்,
நடைபெற்று வரும் தவெக அரசு ஒரு சர்ச்சை அரசாக இருக்கிறது. முதல்வர் விஜய் பொறுப்பேற்றபோது, இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படை என முதன்முதலாக 3 திட்டங்களுக்குக் கையெழுத்திட்டார்.
இலவச மின்சாரம் என்று அறிவித்துவிட்டு, தற்போது அறிவிக்கப்படாத மின்கட்டண உயர்வு ஏற்பட்டிருக்கிறது. மின்தடையும் சர்ச்சையாக இருக்கிறது. அடுத்து, தவெக கட்சியில் பெண்கள் பாதுகாப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால், அக்கட்சியில் உள்ள பெண்கள் அடுத்தடுத்து காவல் நிலையத்தில் அளிக்கும் பாலியல் புகார்களே தமிழ்நாட்டை அதிரவைத்து வருகின்றன.
மூன்றாவதாக, போதைப்பொருள் விவகாரத்தில் நாகையில் தவெக நிர்வாகி கடத்தி வந்த மெகா போதைப்பொருள் நெட்வொர்க்கை தவெக அரசு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால்தான், மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் சுமார் ரூ.135 கோடி மதிப்பிலான போதைப்பொருளைப் பறிமுதல் செய்திருப்பது தவெக அரசுக்குப் மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.
இதோடு, தமிழ்நாடு முழுவதும் சர்வசாதாரணமாகக் கடைகளில் போதைப்பொருள் கிடைக்கிறது. இதனால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
தவெக அரசில் குழந்தைகள் மாயமாகும் சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சி அருகே சிறுமி மாயம், ராணிப்பேட்டை அருகே ஒரு மாதப் பெண் குழந்தை மாயம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம், ஊத்தங்கரையில் 15 வயது சிறுவன், 12 வயது சிறுவன் மாயம், சென்னையில் 5 வயது சிறுவன் மாயம், புதுக்கோட்டையில் 15 வயது சிறுமி மாயம், ஸ்ரீபெரும்புதூரில் 8 வயது சிறுவன் மாயம் என இவை அனைத்தும் கடந்த ஒரு மாத காலத்தில் நடந்த சம்பவங்கள்.
தமிழகத்தில் தவெக ஆட்சியில் பூதாகரமாக வெடிக்கும் இளம் சிறுமிகள், சிறார்கள் மாயமாகும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.
இதில் மின்சாரம், சட்டம், சிறை, லஞ்ச ஒழிப்பு உட்பட 7 முக்கிய துறைகளைக் கவனித்து வரும் அமைச்சர் நிர்மல் குமார், இது குறித்தெல்லாம் பதில் சொல்லி வருகிறார். முதல்வர் பதில் சொல்வதாக இதுவரை நம்முடைய 5 மாத காலத்தில் தெரியவில்லை. ஒருவேளை இனிமேல் பதில் சொல்வாரா என்றும் தெரியாது.
ஆனால், இவ்வளவு சர்ச்சைகளுக்கும் பதில் கூற வேண்டிய முதல்வர் அலுவலகம் அல்லது முதல்வரின் சார்பில் ஏதேனும் விளக்கம் மக்களுக்கு அளிக்கப்படுமா என்று பார்த்தால், எந்த விளக்கமும் இதுவரை வரவில்லை.
ஆனால், நிர்மல் குமார்தான் அறிவிக்கப்படாத முதல்வராக இது குறித்தெல்லாம் விளக்கம் சொல்கிறார். சரி, அப்படிச் சொல்வதால் அவருடைய துறையை அவர் எந்த அளவுக்குக் கவனித்திருக்கிறார்?
இப்போது தமிழகத்தில் அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்தடை சர்ச்சை முடிவுக்கு வருவதற்கு முன்பே, ஒரு யூனிட் மின்சாரத்தை அதிகபட்சமாக ரூ.35-க்கு கொள்முதல் செய்ய டெண்டர் விட்டது அடுத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அதுபோல, புழல் சிறையில் கடந்த வாரம் அடுத்தடுத்து இரண்டு கைதிகள் எஸ்கேப் ஆனார்கள். நேற்று முன்தினம் தேனி சிறையில் 17 கைதிகள் தப்பினார்கள். தவெக ஆட்சி அமைந்த பிறகு இதுவரை 50 கைதிகள் தப்பிச் சென்றிருக்கிறார்கள். முதல்வர்கூட புழல் சிறையை ஆய்வு செய்தார். நிர்மல் குமாரும் ஆரம்பத்தில் ஆய்வு செய்தார். அதற்குப் பிறகு அமைதியாகிவிட்டார்.
அமைச்சர் நிர்மல் குமார் தற்போது அறிவிக்கப்படாத முதல்வராகச் செயல்பட்டு வருவதோடு, தன் துறை சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதில், முதல்வர் எப்படி அனைத்து துறைகளுக்கும் பொறுப்போ, அதேபோல அறிவிக்கப்படாத முதல்வராக நிர்மல் குமார் அனைத்து துறை அமைச்சர்களின் துறைகள் குறித்தும் இவர்தான் விளக்கம் சொல்லுகிறார்.
அமைச்சர்கள் யாரும் விளக்கம் சொல்வதில்லை. முதல்வர் விளக்கம் சொல்வதில்லை. துறை அதிகாரிகள் விளக்கம் சொல்வதில்லை. அல்லது துறை சார்ந்த பதிலும் வெளியே வருவதில்லை.
சர்ச்சை நாயகனாக வலம் வரும் அமைச்சர் நிர்மல் குமார், தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி தவெக அரசுக்குக் களங்கம் ஏற்படுத்தி வருகிறார் என்று தற்போது அவருடைய கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
அதுவும் குறிப்பாக, அரசியல் பேசுகிறபோது அதிகமாக அவர் அக்கறை செலுத்துவது, “அதிமுகவிற்கு எதிர்காலம் இல்லை. எடப்பாடியாருக்கு எதிர்காலம் இல்லை. தொண்டர்களுக்கு எதிர்காலம் இல்லை” என்று சர்ச்சையாகப் பேசுவதுதான். பேசி பேசி தவெகவிற்கு தமிழ்நாட்டில் எதிர்காலம் இல்லாமல் செய்வதுதான் நிர்மல் குமாரின் ஒரே அஜெண்டாவா என்று தவெக கட்சியில் இருக்கக்கூடியவர்கள் கேட்கிறார்கள். இது அதிருப்திக் குரலாக தற்போது செய்தியாக வெளிவந்துகொண்டிருக்கிறது.
இதை நாங்கள் எப்படிப் பார்க்கிறோம் என்று சொன்னால், தவெக கட்சியினர் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்று தெரியாது. “தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்” என்பார்கள். அதேபோல, தவெகவில் இருந்துகொண்டே அதிமுகவின் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்து வழிவகுத்து வருகிறார் நிர்மல் குமார் என்று நாங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
இவர் துறையைக் கவனிப்பதில்லை, கொள்முதலைக் கவனிப்பதில்லை, சிறைத்துறையைக் கவனிப்பதில்லை, லஞ்ச ஒழிப்புத் துறையைக் கவனிப்பதில்லை. எதையும் கவனிப்பதில்லை.
இதைத்தான் சொல்வார்கள், “நீரை விட ரத்தம் கெட்டியானது” என்பார்கள். குடும்பம் மற்றும் சொந்த பந்தங்களின் மீதான இயல்பான பாசமும் கரிசனமும் எப்போதும் இருக்கும்.
அப்படியென்றால், நிர்மல் குமார் ஒரு காலத்தில் அதிமுக குடும்பத்தில் ஒருவராக இருந்தவர் என்ற காரணத்தினால், அதிமுகவின் எதிர்காலம் குறித்துப் பேசி பேசியே தவெகவின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி, அதிமுகவினுடைய எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைத்துத் தருகிறார். அதிமுகவினுடைய ஒளிமயமான எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைத்துத் தருகிறார் நிர்மல் குமார் என்பதைத்தான் அவருடைய சர்ச்சைப் பேச்சும், அவருடைய சர்ச்சையான நடவடிக்கைகளும், அடுத்த துறைகளில் அவர் மூக்கை நுழைப்பதும் காட்டுகின்றன என்று நாம் பார்த்து வருகிறோம்.
ஆகவே, சர்ச்சை நாயகனாகவும் அறிவிக்கப்படாத முதல்வராகவும் வலம் வருகிற நிர்மல் குமார், “அதிமுகவுக்கு எதிர்காலம் எங்கே இருக்கிறது? எடப்பாடியாருக்கு எதிர்காலம் எங்கே இருக்கிறது? அதிமுக தொண்டர்களுக்கு எதிர்காலம் எங்கே இருக்கிறது?” என்று பேசி பேசியே தவெகவிற்கு எதிர்காலம் இல்லாமல் செய்துவிட்டீர்கள் என்பதுதான் தவெக கட்சிக்காரர்களின் விமர்சனமாக இருக்கிறது.
தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு, அறிவிக்கப்படாத மின்கட்டண உயர்வு ஆகியவை உள்ளன.
மாதம் ஒருமுறை மின் கணக்கீடு எடுக்கிறோம் என்று அறிவித்தீர்கள். இதுவரைக்கும் அறிவிக்கவில்லை. சரி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஏற்கெனவே இருக்கிற நடைமுறையைக் கடைப்பிடிப்பீர்கள் என்றால் அதுவும் இல்லை. இரண்டரை மாதம், மூன்று மாதங்கள் ஆகின்றன. அதனால் மின்சார யூனிட்டுகளும் கூடுகின்றன; மின்கட்டணமும் கூடுகிறது.
அறிவிக்கப்படாத மின்கட்டண உயர்வால், இன்றைக்கு உங்களுடைய இயலாமையினால் மக்கள் தலையில்தான் சுமை வந்து விழுகிறது எனக் கூறினார்.
