கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களுக்கும், அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள நார்த் டெக்சாஸ் பல்கலைக்கழகத்திற்கும் இடையே கல்விசார் ஒத்துழைப்பு, பேராசிரியர்கள் , மாணவர்களின் பரிமாற்றம், ஆராய்ச்சிக் கூட்டாண்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் , அமெரிக்காவின் நார்த் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான துணைத் தலைவர் லாரன் ஜேக்கப்சன் பிரிட்ஜஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.இதனைத் தொடர்ந்து , அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நார்த் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரி முதன்மையர் முனைவர் பால் க்ரூகர், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. சௌந்தர்ராஜன் , ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரி முதல்வரும் - செயலருமான , முனைவர் பி.எல்.சிவக்குமார் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், அமெரிக்காவின் டென்டன் நகரில் அமைந்துள்ள நார்த் டெக்சாஸ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பல்வேறு துறைகள் , ஆராய்ச்சிக்கான வசதிகளைப் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்வில், வெளிநாட்டுக் கல்விப் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் பி. மதியழகனும் கலந்து கொண்டார்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இரு கல்வி நிறுவனங்களுக்கும் இடையே கல்வி, ஆராய்ச்சி, சர்வதேசக் கல்விசார் பரிமாற்றங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.
