காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த சுமார் 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

ஒரகடம் பகுதியில் வண்டலூர் – வாலாஜாபாத் சாலை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் – செங்கல்பட்டு சாலை சந்திக்கும் இடத்தில் மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த நிலையில், இந்த மேம்பாலத்தில் இருந்து சுமார் 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கீழே விழுந்துள்ளார். அப்போது பாலத்தின் கீழே சென்று கொண்டிருந்த கார் மீது அந்தப் பெண் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ஒரகடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவமனையின் பிணவறையில் பிரேதப் பரிசோதனைக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளம்பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. மேலும், இளம்பெண் தானாகவே மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தாரா அல்லது வேறு யாராவது அவரைத் தள்ளிவிட்டார்களா என்ற கோணத்திலும் ஒரகடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் இளம்பெண் உயிரிழந்தாரா என்பது பிரேதப் பரிசோதனை மற்றும் காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகே தெரியவரும். ஒரகடம் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த இளம்பெண், சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி . இன் / 8949476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed