​காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் 2026 – ம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

​இக்கூட்டத்தில், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு, ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஹரீஷ் , காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், கூடுதல் ஆட்சியர் ஆஷிக் அலி மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் தொடக்கத்தில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கிப் பேசினார்.
​எனினும், இந்நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என அமைச்சர் தென்னரசு பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்தார்.

​​”குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வரதராஜபுரம், அஷ்டலட்சுமி நகர் போன்ற வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக நேரடியாகச் சென்று ஆய்வு செய்தேன். அதில் அடையாறு கால்வாய் மட்டுமே முறையாகத் தூர்வாரப்பட்டுள்ளது; மற்ற துணைக்கால்வாய்கள் எதுவும் தூர்வாரப்படவில்லை.”
​ஒவ்வொரு மழைக்காலத்திலும் இப்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலையில், அதைத் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் கண்டிப்புடன் உத்தரவிட்டார்.

அமைச்சரைத் தொடர்ந்து பேசிய ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஹரீஷ், தன் தொகுதிக்குட்பட்ட மழை நிவாரணப் பணிகளுக்காகக் குறைந்தபட்சம் 2 வாகனங்கள் கோரப்பட்ட நிலையில், 1 வாகனம் மட்டுமே ஒதுக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டினார்.

​​”பருவமழைக் காலத்தில் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற வேண்டிய சூழலில், வாகனங்கள் ஒதுக்குவதற்குக் கூட ஏன் இவ்வளவு தாமதம்? அதிகாரிகள் ஏன் இந்த அளவுக்கு மெத்தனப் போக்குடன் செயல்படுகிறார்கள்?”என எம்எல்ஏ கேள்வி எழுப்பினார்.

​​கூட்டம் தொடங்கியதுமே அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினரும் அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து அடுத்தடுத்துத் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியது கூட்டரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாவட்டத்தின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து, மழை வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க அரசு அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் விரைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் /எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed