காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தும்பவனம் தெரு பகுதியில், அவ்வப்போது பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக, அங்குள்ள வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் தாய் தந்தை மகன் ஆகியோர் தவித்தனர்.
முரளிதரன் (வயது 65), கௌசல்யா (61) மற்றும் தீனதயாளன் (38) ஆகிய மூன்று பேரும் அவசரத் தகவல் மையத்தை அழைத்து தகவல் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து, உடனடியாகச் செயல்பட்ட நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நவீன மீட்புக் கருவிகளின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கிய மூன்று பேரையும் எவ்வித காயமும் இன்றி பத்திரமாக மீட்டனர்.

சரியான நேரத்தில் தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்தக் குடும்பத்தினரிடம் நிம்மதி பெருமூச்சு ஏற்பட்டது.
செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் /எதிரொலி . இன் / 8939476777
