ஏராளமான குழந்தைகளின் கைவிரல்களைப் பிடித்து ‘அ’ என்ற முதல் எழுத்தை எழுத வைத்து துவக்க கல்வியை தொடங்கி வைத்தனர்...


விஜயதசமி திருநாளை முன்னிட்டு, ஆன்மீக நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களிலும் பள்ளிகளிலும் ‘வித்யாரம்பம்’ நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. புது அத்தியாயத்தைத் தொடங்கும் குழந்தைகளுக்கு நெல் மணிகளில் அட்சராப்பியாசம் செய்து கல்வித் தொடக்கம் செய்து வைக்கப்பட்டது.

நாம் செய்யும் செயல்கள், கலைகள் மற்றும் வித்தைகள் அனைத்திற்கும் அதிபதியாகத் திகழ்பவள் கலைவாணி ஸ்ரீ சரஸ்வதி தேவி. சரஸ்வதி பூஜை நன்னாளில் வீடுகளிலும் அலுவலகங்களிலும் கருவிகள், எழுதுகோல்கள் மற்றும் புத்தகங்களை அடுக்க அமைத்து தேவியின் அருளைப் பெற்று வழிபாடு செய்வது நமது மரபு. அன்று வைக்கப்படும் புத்தகங்களும் ஆயுதங்களும் மறுநாளான விஜயதசமி அன்றே எடுக்கப்பட்டு மீண்டும் வழிபாட்டுடன் உபயோகப்படுத்தப்படும்.

‘விஜயதசமி’ என்றால் ‘வெற்றி தரும் நாள்’ என்பதால் ​மங்களகரமான இந்த விஜயதசமி நாளில் தொடங்கப்படும் எந்தவொரு புதிய காரியமும் சிறப்பான வெற்றியைக் கொடுக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. குறிப்பாக, குழந்தைகளுக்கு முதன்முதலாகக் கல்வி கற்பிக்கும் ‘வித்யா உபதேசம்’ செய்ய இதுவே மிகவும் உன்னதமான நாளாகக் கருதப்படுகிறது.

விஜயதசமி நாளில் தொடக்கக் கல்வியைத் தொடங்கும் குழந்தைகள், எதிர்காலத்தில் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம். மேலும், சரஸ்வதி பூஜையன்று வைத்த புத்தகங்களை விஜயதசமியன்று மீண்டும் பூஜித்து, நைவேத்தியம் படைத்து, ஆரத்தி காட்டி சில வரிகளாவது வாசித்தால் கல்வி அபிவிருத்தியடையும் என்பதும் நம்பிக்கை.

அந்த வகையில், காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஹயக்ரீவர் திருக்கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு ‘வித்யாரம்பம்’ நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. கல்வியின் கடவுளான ஹயக்ரீவர் சந்நிதியில், தட்டுகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் மீது, பெற்றோர் மற்றும் குருமார்கள் குழந்தைகளின் கைவிரல்களைப் பிடித்து ‘அ’ என்ற முதல் எழுத்தை எழுத வைத்து அட்சராப்பியாசம் செய்து வைத்தனர்.

​காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் வருகை தந்து, ஹயக்ரீவரை வழிபட்டுத் தங்கள் குழந்தைகளின் கல்விப் பயணத்தை மிகச் சிறப்பாகத் தொடங்கி வைத்தனர்.

செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed