மதுரையில் கார்களை மாத வாடகைக்கு எடுத்து கந்துவட்டிக்காரர்களிடம் அடகு வைத்தும், பழைய கார்களை விலைக்கு வாங்குவோரிடம் விற்றும் 7 பேர் கொண்ட கும்பல் இருமாதங்களாக கைவரிசை காட்டி வருகிறது. இதுவரை 25 கார்களின் நிலைமை தெரியவில்லை என அதன் உரிமையாளர்கள் புலம்புகின்றனர். இதுகுறித்து போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் பலர் தங்கள் சொந்த கார்களை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டுகின்றனர். இவர்களுக்கு அனைத்து நாட்களிலும் சவாரி கிடைக்காததால் போதிய வருமானம் கிடைப்பதில்லை. சீசனை பொறுத்து வருவாய் கிடைக்கும். நாலைந்து கார்களை வாடகைக்கு விடுவோரை குறிவைத்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது.
உரிமையாளரிடம் ‘காரை வாடகைக்கு விட்டால் நாங்கள் மாதம் ரூ.60 ஆயிரத்தை இரு தவணைகளாக தருகிறோம்’ என அணுகுகின்றனர். ‘சீசன் இல்லாத நேரத்தில் வருவாய் கிடைக்கிறதே’ என உரிமையாளர்களும் சம்மதிக்கின்றனர். சில நாட்களுக்கு முன் ஜி.பி.எஸ். கருவி மூலம் கார் எங்குள்ளது என உரிமையாளர் தேடியபோது அந்த கருவி அகற்றப்பட்டிருந்தது தெரிந்தது.

வாடகைக்கு எடுத்த நபரை தொடர்பு கொண்டபோது போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து தான் உறுப்பினராக உள்ள ” மாற்றத்தை தேடி ” ஓட்டுநர் தொழிற்சங்கத்திற்கு தகவல் தெரிவித்தார். தலைவர் காதர், செயலாளர் இளங்கோ தலைமையிலான நிர்வாகிகள் விசாரித்தபோது, இன்னும் சில உரிமையாளர்கள் இவ்வகையில் ஏமாந்தது தெரிந்தது. இதுபோன்று அந்த கும்பல் 26 கார்களை வாங்கிச்சென்றது தெரிந்தது.

அதில் ஒருகாரில் இருந்த ஜி.பி.எஸ். கருவி மூலம் தேடியதில் அந்த கார் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் ஒரு வீட்டில் இருப்பது தெரிந்தது. அங்கு சென்றபோது, அந்த காரை ரூ.6 லட்சத்திற்கு வீட்டு உரிமையாளர் வாங்கியது தெரிந்தது. இதுகுறித்து திருப்புல்லாணி போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்த மோசடி குறித்து மதுரையை சேர்ந்த வாடகை கார் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் காதர், இளங்கோ கூறியதாவது: 7 பேர் கும்பல் இரு மாதங்களாக இம்மோசடியில் ஈடுபட்டு வருகிறது. கார்களை வாங்கி கந்துவட்டிக்கு கடன் தருவோரிடம் போலி ஆவணங்களை தயாரித்து அடமானம் வைத்து ரூ.1 லட்சம் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் வரை பெறுகின்றனர். சில இடங்களில் ‘உறவினர் கார். மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது’ என்றுக்கூறி புதுக்கார்களை விற்று வருகின்றனர். அப்படி ஒரு காரை விற்ற நபர் சிவகங்கை மாவட்டம் இடைகாட்டூரைச் சேர்ந்த ரவி என்பது தெரிந்தது. அங்கு சென்று காரை மீட்டு வந்தோம்.

மோசடி குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீசார் விசாரித்து வரும் நிலையில், மதுரையிலும் இந்த மோசடியைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed