விவசாயம் பாதிக்கப்படும் சூழ்நிலையில் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், வடக்குப்பட்டு ஊராட்சியில்,சுமார் 2,500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் இரண்டு போகச் சாகுபடி நடைபெற்று வருகிறது. சுமார் 5 அடி அகலம், இரண்டு கிலோமீட்டர் தூரம் நீளமுள்ள கால்வாய்கள் மூலம் வருகின்ற தண்ணீரை பயன்படுத்தி தான் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று ,சுமார் 50 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி கட்டுமான பணிகளை செய்து வருகின்றனர்.இதனால் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரசு பாசனக் கால்வாய்யை தங்கள் சுயலாபத்திற்காக ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு ‘முள்ளி பள்ளம் கோடி கால்வாய்’, ‘நடுக்கால்வாய்’ மற்றும் ‘ஆதிமூலக்கால்வாய்’ உள்ளிட்ட பல பாசன கால்வாய்யைகளை மண் கொட்டி சட்டவிரோதமாக மூடியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர். இதுகுறித்து வடக்குப் பட்டு ஊராட்சியின் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் E. மகாதேவன் மற்றும் கிராம மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

புகார் மனுவில், எங்கள் கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் உள்ள பாசனக் கால்வாய்களை அடைத்ததால், நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீர் ஆதாரமின்றிப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி, வடக்குப்பட்டு பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான விவசாய நிலத்திலும் தனியார் நிறுவனம் அனுமதியின்றி மண் கொட்டி ஆக்கிரமித்துள்ளது. எங்கள் கிராமத்தில் பிரதான தொழில் விவசாயம் என்பதால் விவசாயிகள் அனைவரும் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறோம்.
ஏற்கனவே இருமுறை இக்கால்வாய் மூடப்பட்டபோது கிராம மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் கால்வாய்கள் தோண்டித்தரப்பட்டது. ஆனால், தற்போது கிராம நிர்வாக அலுவலரின் அனுமதியோடு தான் கால்வாய்களை முழுமையாக மூடியுள்ளனர். இதுகுறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மாறாக அலட்சியமான பதில்கள் தான் கிடைக்கின்றன என வேதனைப்பட்டனர்.
இந்தக் கால்வாய்கள் மூடப்பட்டதால், கிட்டத்தட்ட 28 சர்வே எண்களில் உள்ள (189/2, 188/5, 184/7, 193/1A2 , 245/1,246/1,604,695/5) ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே விவசாய நிலங்களையும், கோயில் நிலங்களையும் உடனடியாக ஆய்வு செய்து, அடைக்கப்பட்டுள்ள அரசு பாசனக் கால்வாயை உடனடியாக மீட்டுத் தர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட பொது மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் இப்பிரச்சனை குறித்து, தமிழக முதலமைச்சர், பொதுப்பணித்துறை , ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு கிராம மக்கள் சார்பில் விரிவான புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

அரசு உடனடியாகத் தலையிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரமான பாசனக் கால்வாயை நிரந்தரமாகச் சீரமைத்துத் தர வேண்டும் என வடக்குப்பட்டு கிராம விவசாய மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
செய்திகள் ; லக்ஷ்மிகாந்தன் /எதிரொலி / 8939476777
