வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சிபுரம் மாநகராட்சியின் மையப்பகுதியான காந்தி சாலையில் அமைந்திருக்கும் பிரபல ‘பாபு ஷா’ பட்டுச் சேலை நிறுவனம், புதிதாகக் கட்டிவரும் 7 அடுக்கு மாடி வணிக வளாகத்தில் சட்டவிரோதமாகப் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுபா 90 கழிவறைகளுடன் கட்டப்படும் இந்த பிரம்மாண்ட புதிய கட்டிடத்தில் இருந்து வெளியேறும் பெருமளவிலான கழிவுநீரை, காந்தி சாலையில் உள்ள மாநகராட்சியின் சிறிய பாதாள சாக்கடை குழாயில் இணைத்தால் காந்தி சாலை முழுவதும் கழிவுநீர் வழிந்தோடி சுகாதாரச் சீர்கேடு ஏற்படும். இதனால், வணிக வளாகத்திற்குள்ளேயே கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் (STP) அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட நீரைத் தனியார் தொழிற்சாலைகளுக்கு அனுப்ப வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ஏற்கனவே பாபுஷா நிறுவன உரிமையாளரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலையும் மீறி, இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் பணியில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி, ‘பாபு ஷா’ நிர்வாகம் (மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு), யாருடைய அனுமதியும் இன்றி காந்தி சாலையின் நடுவே தார் சாலையை உடைத்து பள்ளம் தோண்டி 12 இன்ச் குழாய்களைப் புதைக்க முயன்றதாக கூறப்படுகிறது.
முகூர்த்த நாளான இன்று காந்தி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவிய சூழலில், திருட்டுத்தனமாக நடைபெற்ற இந்த வேலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த சமூக ஆர்வலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பணிகளைத் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

“சாதாரண பொதுமக்கள் கட்டணம் செலுத்திவிட்டுக் அவசரத் தேவைக்காக இணைப்பு கேட்டால் ‘சனி, ஞாயிறுகளில் வேலை செய்யக் கூடாது’ என அலைக்கழிக்கும் அதிகாரிகள், இந்தப் பெரு நிறுவனத்திற்கு மட்டும் ஞாயிற்றுக்கிழமையில் சட்டவிரோதமாக இணைப்பு கொடுக்கத் துணைபோவது ஏன்?” என பல்வேறு கட்சிகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஏற்கனவே காந்தி சாலை மற்றும் அன்னை இந்திரா காந்தி சாலைகளில் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களின் கழிவுநீரால் சாக்கடை அடைப்பு ஏற்பட்டுச் சாலைகளில் கழிவுநீர் ஓடும் அவலம் தொடர்கிறது. இந்நிலையில், பாபு ஷா நிறுவனத்தின் 7 அடுக்கு மாடிக் கழிவுநீரும் இதில் கலந்தால் காந்தி சாலையே சாக்கடை ஆறாக மாறிவிடும் என பொதுமக்கள் வேதனையுடன் புலம்புகின்றனர்.

நகர மக்களின் சுகாதாரத்தையும் அமைதியையும் அடகு வைத்து, அதிகாரிகளின் மறைமுக ஆதரவோடு நடைபெற்ற இந்த முறைகேடு குறித்து உடனடியாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் ஊழல் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்துகின்றனர்

செய்திகள் ; லக்ஷ்மிகாந்தன் /எதிரொலி / 8939476777
