கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மருத்துவக் கடை உரிமையாளர்கள் மற்றும் மருந்தாளுநர்களுடன் 07.08.2026 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மருத்துவக் கடைகள் மூலம் போதைப்பொருள் தன்மை கொண்ட மருந்துகள், மனநிலை மாற்றும் (Psychotropic) மருந்துகள் மற்றும் பழக்கத்தை ஏற்படுத்தும் (Habit-forming) மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதையும், தவறான பயன்பாட்டையும் தடுக்கும் நோக்கில் இக்கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கிய முக்கிய அறிவுறுத்தல்கள்:
- பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் (Registered Medical Practitioner) செல்லுபடியாகும் பரிந்துரைச் சீட்டு (Prescription) இருந்தால் மட்டுமே Schedule H, H1, X உள்ளிட்ட கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும்.
- மருந்துகளின் கொள்முதல், விற்பனை, இருப்பு மற்றும் பதிவேடுகளை Drugs and Cosmetics Act மற்றும் அதன்கீழ் உள்ள விதிமுறைகளின்படி முறையாக பராமரிக்க வேண்டும்.
- போலியான அல்லது சந்தேகத்திற்கிடமான பரிந்துரைச் சீட்டுகளின் அடிப்படையில் மருந்துகளை வழங்கக் கூடாது.
- ஒரே நபர் தொடர்ந்து அதிகளவில் மருந்துகளை வாங்குவது, போலி பரிந்துரைச் சீட்டுகள் பயன்படுத்துவது அல்லது சந்தேகத்திற்கிடமான முறையில் மருந்துகள் வாங்கப்படுவது கண்டறியப்பட்டால் உடனடியாக காவல்துறைக்கும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
- மருத்துவக் கடைகளில் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை முறையாக செயல்படுவதை உறுதி செய்து, பதிவுகளை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும்.
- மருந்தாளுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சந்தேகத்திற்கிடமான வாடிக்கையாளர்கள், போலி பரிந்துரைச் சீட்டுகள் மற்றும் சட்டவிரோத மருந்து பயன்பாட்டை கண்டறியும் வகையில் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்க வேண்டும்.
- NDPS Act, Drugs and Cosmetics Act மற்றும் தொடர்புடைய சட்டங்களின் அனைத்து விதிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
- காலாவதியான மருந்துகளை விதிமுறைகளின்படி மட்டுமே அழிக்க வேண்டும்; அவை சட்டவிரோத பயன்பாட்டிற்கு செல்லாதவாறு பாதுகாக்க வேண்டும்.
- கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள் திருட்டு, காணாமல் போதல் அல்லது சட்டவிரோதமாக மாற்றி விற்பனை செய்யப்படுவதாக சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவக் கடை உரிமையாளர்கள், சட்டவிரோத மருந்து விற்பனை மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க உறுதியளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை, போதைப்பொருள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளின் சட்டவிரோத விற்பனை அல்லது பயன்பாடு குறித்து தகவல் தெரிந்தால், பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது அவசர உதவி எண் 100-க்கோ உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.

செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777
