காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 22 வது வார்டு திருவீதி பள்ளம் பகுதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் உரம் தயாரிக்கும் வளாக சாலையில், ₹55 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் சுவர், கட்டப்பட்ட மூன்றே நாட்களில் சுமார் 500 அடி நீளத்திற்கு இடிந்து விழுந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திட்ட விவரங்கள்:
மாநகராட்சி வார்டு 22-ல் 744 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் மற்றும் மதகு அமைக்கும் பணிக்கு (Storm Water Drain and R.C.C Culvert with Cover Slab) ஜி.எஸ்.டி உட்பட ₹55 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்தப் பணியை ‘விடிஎன் கன்ஸ்ட்ரக்ஷன்’ உரிமையாளர் துவாரகேஷ் என்ற ஒப்பந்ததாரர் மேற்கொண்டு வருகிறார்.

விதிகளை மீறிய தரம் குறைந்த கட்டுமானம்:
அரசு விதிமுறைகளின்படி வடிகால் சுவருக்கு 1:2:4 விகிதத்திலான கான்கிரீட் கலவை (385.996 M3), 20 மி.மீ HBG ஜல்லி மற்றும் 900 கிலோ இரும்பு கம்பிகள் (Fe 415 TMT Rods) பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், கள நிலவரப்படி:
உரிய முறையில் தரை ஜல்லி போடப்படவில்லை.
தரம் குறைந்த எம்-சாண்ட் (M-Sand) மற்றும் வரையறைக்கு மாறான பெரிய ஜல்லிக் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சுவர்களுக்குப் போதிய இரும்பு கம்பிகளோ, பலமான அடித்தளமோ அமைக்கப்படாமல் அவசர அவசரமாக பணிகள் நடந்துள்ளன.
இதன் காரணமாகவே, கட்டப்பட்ட 3 நாட்களிலேயே 500 அடி நீளமுள்ள சுவர் சரிந்து விழுந்துள்ளது.

அவலங்களை மறைக்க முட்புதர்கள்:
இடிந்து விழுந்த சுவர்களை கிரேன் மூலம் அவசர அவசரமாக அப்புறப்படுத்திய ஒப்பந்ததாரர், அதை முட்களைப் போட்டு மறைத்து வைத்த அவலமும் நடந்துள்ளது.
இதனிடையே, இத்திட்டம் தொடர்பான அரசு ஆவணங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விஷயம் பூதாகரமானதைத் தொடர்ந்து, இன்று ஒப்பந்ததாரர் துவாரகேஷ் அவசர அவசரமாக இடிந்த இடங்களில் மிகவும் மெலிதான இரும்பு கம்பிகளை வைத்து மீண்டும் கட்டுமானம் செய்யத் தொடங்கியுள்ளார்.

சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகள்:
சட்ட நடவடிக்கை: வரிப்பணத்தைச் வீணடித்து தரமற்ற முறையில் பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரர் துவாரகேஷ் மற்றும் அவருக்குத் துணையாக இருந்த மாநகராட்சி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருப்புப் பட்டியலில் சேர்க்கை: இந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தைக் கருப்புப் பட்டியலில் (Blacklist) சேர்க்க வேண்டும்.
நஷ்ட ஈடு: இடிபாடால் ஏற்பட்ட நிதி இழப்பை ஒப்பந்ததாரரிடமிருந்தே முழுமையாக வசூலிக்க வேண்டும்.
இதர பணிகளில் ஆய்வு: ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் வெங்காடு பகுதியில் ₹4 கோடி மதிப்பிலும், பிள்ளைப்பாக்கம் பகுதியில் ₹1.90 கோடி மதிப்பிலும் இதே ‘விடிஎன் கன்ஸ்ட்ரக்ஷன்’ மேற்கொண்ட பணிகளையும் அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.
மாநகராட்சி அதிகாரிகளின் நேரடி மேற்பார்வை இல்லாததே இந்த முறைகேட்டிற்கு முக்கியக் காரணம் என்பதால், மாவட்ட நிர்வாகம் இதில் நேரடியாகத் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

செய்திகள் ; லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி / 8939476777
