திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மெதூர் அருகில் உள்ள குமரஞ்சேரி கிராமத்தில் அருள்மிகு குமாரசாமி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் கி.பி.6 ம் நூற்றாண்டில் இந்த பகுதிகளை ஆண்ட மகேந்திரவர்ம பல்லவனால் கட்டமைக்கப்பட்டது என வரலாற்று ஆராய்ச்சி மூலம் தெரிய வருகிறது.

ஒரு காலகட்டத்தில் இந்த பகுதியில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால் இந்த ஆலயம் அருகில் இருந்த ஏரியில் புதையுண்டு போனது. அந்த சூழ்நிலையில் கடந்த நூறாண்டுகளுக்கு முன்பு ஏரி வற்றியிருந்த போது சுமார் ஏழடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்திலிருந்த கிராம மக்கள் கண்டெடுத்தனர். பின்னர் ஏரிக்கரையில் முருகப்பெருமானை வைத்து வழிபட்டு வந்தனர்.

அப்போது அந்த கிராமத்திற்கு வந்த சாது ஒருவர் முருகப்பெருமானை வணங்கி குமாரசாமி என பெயர் வைத்ததாகவும் இதன் காரணமாக இந்த கிராமத்திற்கு குமரஞ்சேரி என பெயர் வந்ததாக கூறப்படுகிறது. தொண்டை மண்டலத்தில் தர்மசாஸ்தா வடிவில் முருகப்பெருமான் ஆலயம் எண்ணற்ற இடங்களில் அமைந்துள்ளது.

ஆனால் வட மண்டலத்தில் முருகப்பெருமான் தர்மசாஸ்தா வடிவத்தில் இங்கு மட்டும்தான் திவ்யமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.   இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த குமாரசாமி ஆலயத்திற்கு சமீபகாலமாக மாவட்டம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து குமாரசாமி கடவுளை தரிசித்து செல்கின்றனர்.

குழந்தை வரம், திருமண வரம் உள்ளிட்ட தங்களது வேண்டுதலை முருகப்பெருமான் நிறைவேற்றி தருவதாக பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். இந்த ஆலயத்தின் செவ்வாய்கிழமை வழிபாடு மிகவும் பிரசித்தமாக கருதப்படுகிறது. செவ்வாய்கிழமையான நேற்று அதிக அளவிலான பக்தர்கள் இங்கு குவிந்தனர்.

குமாரசாமி கடவுளுக்கு நறுமண திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஆலயத்திற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்திகள் ; குமரன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed