கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூரியர் நிறுவனங்கள், பார்சல் சேவை நிறுவனங்கள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் 06.08.2026 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூரியர் சேவைகள் மூலம் கஞ்சா, போதைப்பொருட்கள், மனநிலை மாற்றும் மருந்துகள், சட்டவிரோத ஆயுதங்கள், வெடிபொருட்கள், போலி நாணயங்கள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக காவல்துறையும், கூரியர் நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், ஒவ்வொரு பார்சலையும் பெறும் முன் அனுப்புநரின் அடையாளம் மற்றும் முகவரி ஆவணங்களை கட்டாயம் சரிபார்க்க வேண்டும் என்றும், அனுப்புநர் மற்றும் பெறுநரின் முழு விவரங்களையும் முறையாக பதிவு செய்து பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், ஒரே அனுப்புநரிடமிருந்து ஒரே பெறுநருக்கு தொடர்ந்து அனுப்பப்படும் பார்சல்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி சரிபார்க்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான பார்சல்கள் அல்லது போதைப்பொருள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவதாக சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கூரியர் அலுவலகங்கள் மற்றும் கிடங்குகளில் CCTV கேமராக்கள் முறையாக பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருக்க வேண்டும், பதிவுகள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும், சந்தேகத்திற்கிடமான பார்சல்களை உரிய ஆவணங்கள் இன்றி ஏற்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், கூரியர் நிறுவனங்களில் பணிபுரியும் முன்பதிவு ஊழியர்கள், விநியோக பணியாளர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு சந்தேகத்திற்கிடமான பார்சல்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை அடையாளம் காணும் வகையில் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கூரியர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும், சட்டவிரோத கடத்தல்களைத் தடுப்பதில் காவல்துறையுடன் முழு ஒத்துழைப்பும் வழங்குவதாக உறுதியளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை பொதுமக்கள் மற்றும் கூரியர் நிறுவனங்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, சந்தேகத்திற்கிடமான பார்சல்கள் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது அவசர உதவி எண் 100-க்கோ உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.
செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777
