விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம் சேத்தூரில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் தேசிய வேளாண் மின்னணு சந்தை மூலம் தேங்காய் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தொடங்கி வைத்தார்.
சேத்தூர் பகுதியைச் சேர்ந்த ஐந்து விவசாயிகள் கொண்டு வந்த சுமார் 10,000 தேங்காய் விலை நாம் முறைப்படி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் விற்பனையை தொடங்கி வைத்தார். ஒரு தேங்காய் ஒன்றுக்கு ரூ.13.50 வீதம் விற்பனை ஆனது. தேங்காய் விற்பனையானவுடன் விவசாயிகளின் கணக்கில் உடனடியாக பணம் வரவு வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மோகன் தாஸ் சௌமியன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கந்தசாமி, மார்க்கெட்டிங் கமிட்டி செயலர் குமரன், ராஜபாளையம் வட்டாட்சியர் ராஜீவ் காந்தி, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சீனியம்மாள், விவசாயிகள் என்.ஏ. ராமச்சந்திர ராஜா, சேத்தூர் அம்மையப்பன் விஜயமுருகன், மம்சாபுரம் அப்பாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும்போது: “தமிழக அரசானது விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலையினை பெற்றுத்தருவதற்காகவும், வியாபாரிகள் எவ்வித இடைத்தரகர்கள் இன்றி தேங்காய்காயினை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளும் வகையிலும் தேசிய வேளாண் மின்னணு சந்தை (e-NAM) திட்டத்தினை செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளது.

அதனை உறுதி செய்யும் வகையில் தேசிய வேளாண் மின்னணு சந்தை (e-NAM) திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை வெளிப்படையான, தொழில்நுட்ப அடிப்படையிலான இணையதள ஏல முறையில் விற்பனை செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இதனால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த வணிகர்கள் போட்டி அடிப்படையில் ஏலத்தில் பங்கேற்பதால், விவசாயிகளுக்கு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அதிகபட்ச விலை கிடைக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தியில் சிறந்து விளங்கும் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சேத்தூர் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளைச் சேர்ந்த தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, தேங்காய் கொள்முதல் செய்து மின்னணு தேசிய வேளாண் சந்தை வாயிலாக விற்பனை செய்யும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் விவசாயிகள் அதிக வருமானம் பெற முடியும். தரமான விளைபொருட்களை சந்தைப் படுத்துவதன் மூலம் வணிக வாய்ப்புகள் விரிவடைவதுடன், சந்தை தொடர்பான தகவல்கள், ஏல விவரங்கள் மற்றும் விலை நிலவரங்களையும் விவசாயிகள் உடனுக்குடன் அறிந்து பயன்பெற முடியும்.
மேலும், மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் மூலம் இடைத்தரகர்களின் தலையீடு குறைக்கப்பட்டு, வெளிப்படையான விற்பனை நடைமுறை உறுதி செய்யப்படுகிறது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக தொகை செலுத்தப்படுவதால் பாதுகாப்பான மற்றும் விரைவான பரிவர்த்தனை நடைபெறுகிறது. இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயர்வதோடு, வேளாண் பொருட்களின் சந்தைப்படுத்தல் நவீனமயமாக்கப்பட்டு, வேளாண் வணிக வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகின்றன.

எனவே, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் மின்னணு தேசிய வேளாண் சந்தை (e-NAM) திட்டத்தில் பதிவு செய்து, அதன் மூலம் தங்களது வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்து அரசின் இத்திட்டத்தின் முழுப் பயனையும் பெற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
தென்னை விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு சரியான விலை, இடைத்தரகர்களின்றி விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, மாவட்டத்தில் 3 இடங்களில் தென்னை கொள்முதல் செய்து, மின்னணு சந்தை மூலம் சரியான விலை கிடைக்க உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு இப்பகுதி தென்னை விவசாயிகள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

செய்திகள் ; ராமகிருஷ்ணன் எதிரொலி / 8939476777
