கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே ஆஞ்சநேயர் கோயில் கட்ட குழி தோண்டிய போது 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமப்பேழை கண்டுபிடிக்கப்பட்டது...

கிருஷ்ணகிரி மாவட்டம், பல தொல்லியல் சான்றுகளை தொடர்ந்து நமக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள வெள்ளைச்சியம்மாள் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்த நடுக்கல்லுக்கு கோயில் கட்ட கந்திகுப்பம் பைரவ சாமிகள் முயற்சியோடு கடைகால் தோண்டும் பணி நடந்தது. அப்போது குழியில், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், இரண்டு மண் குவளைகள் போன்றவை கிடைத்தன.

தொடந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் அவர்களது அறிவுறுத்தலின் பேரில், அந்த இடத்திற்கு பர்கூர் வட்டாட்சியர் சக்தி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் நேரில் சென்று பானைகள் மற்றும் பானை ஓடுகளை மீட்டு, பர்கூர் தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைத்தனர்.

இப்புதைப்பொருட்களை கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து அவர் கூறியதாவது…..

ஈமபேழை பல துண்டுகளாக உடைந்து நொறுங்கி காணப்பட்டது. அந்த ஈமப்பேழைக்கு மொத்தம் 16 கால்கள் இருந்துள்ளன. இந்த ஈமப்பேழை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அவ்விடத்தில் வேலை செய்தோரிடம் விசாரித்ததில் இவை கருங்கல்லால் அமைக்கப்பட்ட தரை தளத்தின் மீது வைக்கப்பட்டு அதன் அருகே மூன்று மண் குவளைகள் இருந்ததாகக் கூறினர். இவை ஐந்து சென்டி மீட்டர் உயரம். பத்து சென்டிமீட்டர் அகலமும் கொண்ட கருப்பு சிவப்பு வண்ண சிறு குவளைகள் ஆகும்.

இது மட்டுமல்லாமல் 10 சென்டி மீட்டர் உயரமும் 16 சென்டி மீட்டர் குறுக்களவும் கொண்ட சற்று பெரிய கருப்பு சிவப்பு வண்ண மண் பாண்டம் சிறிது உடைந்த நிலையில் கிடைக்க பெற்றது. ஒன்னேகால் அடி விட்டம் கொண்ட கருப்பு சிவப்பு வண்ண தட்டு ஒன்றும் உடைபட்ட நிலையில் கிடைக்க பெற்றது. ஒவ்வொரு குவளையிலும் சம இடைவெளிகளில் மூன்று பக்கமும் இறந்த தலைவனின் குலக் குறியீடு கோடுகளாக வரையப்பட்டுள்ளன. இவை ஆறு கட்டங்களை கொண்டதாக உள்ளன.

இது மட்டுமல்லாமல் கொம்பு போன்று செய்யப்பட்ட ஐந்து மண்ணாலான பகுதிகள் ஜாடி போன்ற மட்கலனின் தாங்கிகள் உள்ளன. இவை ஜாடியின் அடிப்பகுதியில் காணப்படும் 32 செ.மீ விட்டமும் 15 செ.மீ உயரமும் கொன்ட வாணலி போன்ற கருப்பு சிவப்பு வண்ண மண்பாண்டம் உள்ளது. சிறு சிறு பானைகள் உடைந்த நிலையில் கிடைந்துள்ளன. அனைத்து மண்பாண்டங்களிலும் குலக்குறியீடுகள் கீறப்பட்டுள்ளன.

மேலும் இதில் 50க்கும் மேற்பட்ட சிறு, சிறு எலும்பு துண்டுகள் மற்றும் இரும்பு துண்டு கிடைக்கப்பெற்றன. இது அவன் பயன்படுத்திய ஆயுதமாக இருக்கலாம். எனவே, இது ஒரு குழுத் தலைவனுக்கு அமைக்கப்பட்ட ஈமப் பேழையாகும். இந்த இடத்தின் மேல் பகுதியில் இருந்த பெரிய பலகைக்கல், கல் திட்டையின் மூடுபலகையாக இருக்க கூடும். இதற்கு மேல்புறம் 5 கற்குழிகள் காணப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு செய்யப்பட்ட இந்த புதைப் பொருட்களை, பர்கூர் தாசில்தார் சக்தி, அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமாரிடம் ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலாளர் கோவிந்தராஜ், வரலாற்று ஆவணப்படுத்தும் குழுவின் நாராயணமூர்த்தி, தமிழ்செல்வன், மாருதி மனோகரன், பாலாஜி, டெய்ஸி, லாசிமா ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed