ஐந்து ஆண்டுகளாக ‘போலி கணக்கு’ காட்டியதாக பெண் மருத்துவர் மீது பகீர் குற்றச்சாட்டு...
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை அரங்கு கடந்த 35 நாட்களாக மூடப்பட்டிருப்பதால், நாள்தோறும் சிகிச்சைக்காக காத்திருக்கும் ஏராளமான நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


வழக்கமாக தினமும் 5 முதல் 10 வரை கண் அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வந்த நிலையில், ஜூன் 13-ஆம் தேதி அறுவை சிகிச்சை அரங்கின் மேற்கூரை சீலிங் டைல்ஸ் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து அரங்கு மூடப்பட்டது.
நான்கு கட்ட நுண்ணுயிரியல் பரிசோதனைகளும் முடிந்து, இறுதி அறிக்கையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்பட்டும், இதுவரை அறுவை சிகிச்சை மீண்டும் தொடங்கப்படாதது நோயாளிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் தனியார் மருத்துவமனைகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதற்கிடையே, மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கண் அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றும் ஒரு பெண் மருத்துவர் கவிதா ராணி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக அறுவை சிகிச்சை செய்யாமலேயே செய்தது போல் மாதாந்திர பதிவுகளில் கணக்கு காட்டியதாக கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மற்ற மருத்துவர்கள் செய்த அறுவை சிகிச்சை எண்ணிக்கையைப் பிரித்து தனது பெயரில் பதிவு செய்து அரசை ஏமாற்றியதாகவும், இந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகத்தின் பங்கும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

35 நாட்களாக மூடப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கு எப்போது திறக்கப்படும்? நூற்றுக்கணக்கான நோயாளிகளின் அவதிக்கு யார் பொறுப்பு? “போலி கணக்கு” குறித்த குற்றச்சாட்டில் முழுமையான விசாரணை நடத்தி, உண்மை வெளிக்கொண்டு வரப்படுமா? என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற இந்த விவகாரம், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் ; லட்சுமி காந்தன் எதிரொலி / 8939476777
