காட்டுப்பள்ளி துறைமுகம் முதல் – மகாபலிபுரம் வரையிலான 10 வழி சாலை பணிகள் ஓராண்டுக்குள் நிறைவடையும் என பேட்டி.

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்து வரும் காட்டுப்பள்ளியையும் மகாபலிபுரத்தையும் இணைக்கும் சாலை, சென்னை புறவட்ட சாலை (Chennai Peripheral Ring Road – CPRR) திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த 10 வழி விரைவுச் சாலை, மகாபலிபுரம் பூஞ்சேரியில் தொடங்கி, காட்டுப்பள்ளி துறைமுகம் வரை 132 கி.மீ தூரத்திற்கு ரூ.16,500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.
6 பிரதான வழித்தடங்கள் (Main Lanes) மற்றும் இருபுறமும் 2 சேவைச் சாலைகள் (Service Lanes) என மொத்தம் 10 வழிச் சாலையாக அமைகிறது. மணிக்கு 120 கி.மீ வேகத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இச்சாலை, மகாபலிபுரம் (பூஞ்சேரி) தொடங்கி -> சிங்கபெருமாள்கோவில் -> ஸ்ரீபெரும்புதூர் -> திருவள்ளூர் -> தாமரைப்பாக்கம் -> பெரியபாளையம் -> புதுவாயல் -> காட்டுப்பள்ளி வரை வந்து அடையும். தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் இருந்து வரும் சரக்கு லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் எளிதாக சென்னை மாநகருக்குள் நுழையாமல், எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தை அடைய முடியும்.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் மிக விரைவாக வடசென்னை துறைமுக பகுதிகளை அடைய இது உதவும்.
இத்திட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வரும் நிலையில், பஞ்செட்டி அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை கடக்க உதவும் மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனை, மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த திட்ட பணிகள் ஓராண்டுக்குள் நிறைவடையும் எனவும், தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னையை விரைவில் கடப்பதற்கு இது உதவும் எனவும் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, பொன்னேரி சாராட்சியர் அப்துல் ராசாக், பொன்னேரி வட்டாட்சியர் ஜெய்கர் பிரபு, நெடுஞ்சாலை தனி வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777
