கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் மேல் மக்கானில் நடைபெற்று வரும் மொகரம் திருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, பக்தர்கள் புலி வேடம் அணிந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

காவேரிப்பட்டினம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஹிமாயத் என்ற இஸ்லாமிய இளைஞர், தனது குடும்பத்தின் நேர்த்திக்கடனை முன்னிட்டு புலி வேடம் அணிந்து, மேல் மக்கானில் அமைந்துள்ள பஞ்சா அல்லாஹ் சாமியை வழிபட்டார். பின்னர், மேளதாளங்கள் முழங்க காவேரிப்பட்டினம் நகரின் முக்கிய வீதிகளில் நடனமாடி ஊர்வலமாகச் சென்றார்.

இந்த புலி வேட ஊர்வலம் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. குறிப்பாக, இளம் தலைமுறையினரும் சிறார்களும் புலி வேட நடனத்தை ஆர்வத்துடன் கண்டு ரசித்து, உற்சாகமாக மகிழ்ந்தனர்.
நகர் முழுவதும் நடைபெற்ற இந்த நிகழ்வை காண இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையோரங்களில் திரண்டு நின்று கண்டு களித்தனர். மத நல்லிணக்கம் மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்தை எடுத்துக்காட்டும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, திருவிழாவின் முக்கிய அம்சமாக அமைந்தது.

செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி /. 8939476777
