நில உரிமையாளரிடம் அனுமதி பெறாமல், இசைஞானி இளையராஜாவின், “இசை ராஜாங்கம்” இன்னிசை நிகழ்ச்சி நடத்தும் உரிமையாளர் மீது பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார்…
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அணைக்கட்டு தாலுக்கா கந்தனேரி ஊராட்சியில் இருக்கக்கூடிய
விளைநிலங்களில் அதிக அளவில் பஞ்சமி நிலங்கள் உள்ளன. அந்த நிலங்களில் சுமார் 15 ஏக்கர் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து, ஒரு சிலர் ஜேசிபி இயந்திரங்களின் மூலம் சமன் செய்யக்கூடிய பணிகளை செய்து வந்தனர். அதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பணியில் ஈடுபட்டவர்களிடம், இந்த இடத்தை ஏன் சமன் செய்கிறீர்கள் நாங்கள் இந்த இடத்தில் தான் விவசாய பணிகளை செய்து வருகிறோம். நீங்கள் இப்படி வரப்புகளை எல்லாம் வெட்டிவிட்டு சமன் செய்து விட்டால், நாங்கள் விவசாயம் செய்யக்கூடிய பணிகள் தடைபடும் என கூறியுள்ளனர்.

அப்போது அங்கிருந்தவர்கள், வருகின்ற 20 ம் தேதி இந்த இடத்தில், இசைஞானி இளையராஜாவின், “இசை ராஜாங்கம்” என்ற இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்காகத்தான் இந்த நிலத்தை நாங்கள் சமன் செய்து கொண்டு இருக்கிறோம் என, கூறியுள்ளனர்.
அதை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், ” இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது, யாரை கேட்டு இந்த இடத்தை சேதப்படுத்துகிறீர்கள்.” எனக்கேட்டு உள்ளனர். அதனால் அங்கு சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், அந்த பகுதி தலித் சமுதாய பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த புகார் மனுவில், கந்தனேரி ஊராட்சியில், “எங்களுக்கு சொந்தமான பஞ்சமி விளைநிலம் உள்ளது. அந்த பஞ்சமி விளைநிலம் உரிமையாளரிடம், யாரும் எந்தவிதமான அனுமதியும் பெறாமல் எங்களுடைய விளைநிலங்களை சேதப்படுத்தியும், நிலத்தை ஆக்கிரமித்தும் நடைபெற்று கொண்டு இருக்க கூடிய பணிகளை நிறுத்தி வைக்குமாறும், எங்களுடைய அனுமதி இல்லாமல் எங்கள் விளைநிலத்தில் நடைபெற உள்ள இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்குமாறும்” அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அந்த புகாரின் அடிப்படையில், பள்ளிகொண்ட காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் மற்றும் அணைக்கட்டு வட்டாட்சியர் அவர்கள் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற இருந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தபோது, அந்த நிலம் தலித் மக்களின் நிலம் என்றும் அவர்களிடம் அனுமதி பெற்ற பிறகு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என்றும் அந்த நிலம் அரசு நிலம் இல்லை, அதனால், நில உரிமை யாளர்களிடம் முறையாக அனுமதி பெற்ற பிறகு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றும் பள்ளிகொண்டா ஆய்வாளருக்கு அணைக்கட்டு வட்டாட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.


இந்நிலையில், இளையராஜாவின் இன்னிசை ராஜாங்கம் கச்சேரி நடைபெற இருந்த நிகழ்ச்சிக்கான கட்டமைப்பு பணிகள் நிறுத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
செய்திகள் ; மூர்த்தி / எதிரொலி / 8939476777
