ஆண்டு தோறும் சித்திரை மாதம் பிறந்தாலே அனைத்து ஊர்களிலும் உள்ள கோவில்கள் அனைத்திலும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது நடைமுறை பழக்கமாக உள்ளது.இதனிடையே, சித்திரை மாதம் மதுரை அருகே உள்ள அழகர் கோவில் பெருமாள் மதுரைக்கு வருகை தந்து தங்க குதிரையில்  கள்ளழகர் வேடம் பூண்டு எழுந்தருளி மதுரை வைகையாற்றில் இறக்குவார்.
      
பிரசித்தி பெற்ற மதுரைக்கு இணையாக ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாளும் பலவர்ண மலர்களால் சூழப்பட்ட பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி பரமக்குடி வைகையாற்றில் இறங்குவது வரலாற்று சிறப்பாகும். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஸௌராஷ்ட்ர பிராஹ்மண மஹாஜனங்களுக்குச் சொந்தமான ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோவிலின் கோடைத் திருவிழா என்னும் சித்திரை திருவிழா கடந்த 26-ந் தேதி (ஞாயிறு) தொடங்கியது.
    

திருவிழா தொடர்ந்து பெருமாள் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தார்.
திருவிழாவின் சிகர நிகழ்வாக, 01.05.2026. (வெள்ளி) பலவர்ண மலர்களால் சூழப்பட்ட பூப்பல்லக்கில் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு வெண் பட்டு உடுத்தி , வெள்ளி பாத்திரத்தில் பால் பாயாசம் சாப்பிட்டபடி கோவிலினுள் இருந்து புறப்பட்டு பதினெட்டாம்படி கருப்பணிடம் விடை பெற்று சித்ரா பௌர்ணமி நிலவு பிரகாசித்தலிலும், தீப்பந்தங்கள் வெளிச்சத்திலும் , பல வர்ண வாண வேடிக்கைகள் முழங்க பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் வைகையாற்றில் நள்ளிரவு 02.52 மணிக்கு இறங்கினார்.

அது சமயம், வைகையாற்றினுள் இரவு முழுவதும் பெருந்திரளாக குழுமியிருந்த பக்தர்கள் கூட்டம் விண்ணை பிளக்கும் வகையில் கோவிந்தா … கோவிந்தா … என
கூக்குரலிட்டு மலர்களை தூவி சாமி தரிசனம் செய்தனர்.
வெண்பட்டு உடுத்தி வந்ததால் மாநிலம் முழுவதும் அமைதியும் , சுபிட்சமும் ஏற்படும் என்பது ஐதீகம்.
வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர் பல்வேறு மண்டகப்படிகளுக்குச் சென்று பக்தர்களுக்கு காட்சி தந்து தல்லாகுளம் என்னும் மேலச்சத்திரத்தை சென்றடைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தங்க சிங்க வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி சீர்பாதங்கள் தாங்கி , பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் பீச்சாங்குழல் மூலம் மஞ்சள் தண்ணீர் பீய்ச்சியடிக்க , கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 09.54 மணிக்கு தல்லாகுளத்தில் இருந்து புறப்பட்டு மேலச்சத்திரத்தின் அனைத்து பகுதிகள், காட்டுபரமக்குடி, ஓட்டப்பாலப் பகுதி, மஞ்சள்பட்டிணம், ஆற்றுப்பாலம், காந்திஜி ரோடு, அனுமார் கோவில், அக்ரஹாரம் தெரு, பெரியகடைவீதி, பெருமாள் கோவில் பகுதி, சௌராஷ்ட்ர தெருக்கள், எமனேஸ்வரம் என அனைத்து பகுதிகளிலும் பகல் முழுவதும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்த கள்ளழகர் இரவு வண்டியூர் என்னும் காக்காத்தோப்பு கருப்பணசுவாமி கோவிலை சென்றடைவார்.

திருவிழாவையொட்டி, நகர் முழுவதும் ஆங்காங்கே பக்தர்களுக்கு விசிறிகள் வழங்கியும், கேசரி, சர்க்கரை பொங்கல், புளியோதரை, லெமன் சாதம், வெண் பொங்கல், சர்பத், மோர் என பல்வேறு அமைப்பினர்கள் நிறுவனங்கள் தனியார்கள் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.
ஆற்றுப் பாலம் பகுதியில் இருந்து 2 கி.மீ. தூரம் உள்ள காக்கா தோப்புவிற்கு ஆயிரம் பொன் சப்பரம் நூற்றுக்கணக்கான பக்தர்களால் வைகையாற்றில் இழுத்து செல்லப்பட்டு, காக்காதோப்பில் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளி சந்தன காப்பு நிகழ்வு நடைபெறும்.

பெருமாள் கோவில் வைகையாற்று பகுதி, காக்காத்தோப்பு பகுதியிலும் குடும்பம் … குடும்பமாக … மணலில் சித்ரா பௌர்ணமி நிலவு ஒளியில் அமர்ந்து ஸ்நாக்ஸ், ஐஸ் கிரிம், கூல்டிரிங்ஸ், தோசை போன்ற உணவுப் பொருட்களை உண்டு மகிழ்வார்கள்.
02-ந்தேதி (சனிக்கிழமை) வைகையாற்றில் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள வாணியச் உறவின்முறையார்களின் மண்டகப்படியில் எழுந்தருளி விடிய… விடிய… தசாவதாரக் காட்சிகள் நடைபெறும். தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் மட்டாமண்டகப்படி, கிரி.கு. ஸ்ரீநிவாசய்யர் சன்ஸ் மண்டகப்படியிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்த கள்ளழகர் 05-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை பல வர்ண மலர்களால் சூழப்பட்ட பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி காலை வைகையாற்றிலிருந்து வெளியேறி நகரின் அனைத்து பகுதிகளிலும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலிப்பார்.

மாலை பெருமாள் கோவிலை சென்றடைந்து, இரவு கண்ணாடி சேவை நடைபெறும். 06-ந்தேதி (புதன்) உற்சவ சாந்தி நடைபெறும்.
திருவிழாவை யொட்டி, கோவில் வளாகம், வைகையாற்று பகுதிகள், சௌராஷ்ட்ர பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் பல வர்ண சீரியல் பல்ப், டியூப், போக்கஸ் லைட் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டு காட்சியளிக்கிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மானேஜிங் டிரஸ்டி சித்து எஸ்.ஆர்.ரெங்காச்சாரி , டிரஸ்டி அண்டு டிரஷரர் நீலம் என்.ஆர். நீலகண்டன், டிரஸ்டிகள் துர்வாசு டி.ஆர்.ரமேஷ்பாபு , குச்சேரி கே.டி.கிரிதரன், கெட்டி ஜி.என்.கோவிந்தன் ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர்.
சித்திரை திருவிழாவில், மதுரை வைகையாற்றில் தங்ககுதிரையில் கள்ளழகர் எழுந்தருளி பின்பு பூப்பல்லக்கில் வலம் வருவார்.
பரமக்குடி வைகையாற்றில் பலவர்ண மலர்களால் சூழப்பட்ட பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி பின்பு தங்க குதிரையில் வலம் வருவது நடைமுறை பழக்கமாக இருந்து வருகிறது.
தமிழ்நாட்டிலேயே முத்தாய்ப்பாக பங்குனித் திருவிழாவில் , பரமக்குடி ஸ்ரீ முத்தாலம்மன் கள்ளழகர் வேடம் பூண்டும், சித்திரை திருவிழாவில் பரமக்குடி ஸ்ரீ சுந்தராஜப் பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டும் ,
வைகாசித் திருவிழாவில், ஸ்ரீவரதராஜப் பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டும் பல வர்ண மலர்களால் சூழப்பட்ட பூப்பல்லக்கில் எழுந்தருளி பரமக்குடி வைகையாற்றில் இறங்குவது வரலாற்று சிறப்பு மிக்கதாகும் . தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 3 முறை கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவது பரமக்குடி நகரில் மட்டுமே என்பது தனிச்சிறப்பாகும்.

மாமுஜெயக்குமார் /
மாவட்ட செய்தியாளர் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *