ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரப் போக்குவரத்துக் கழகத்தில் லட்சக்கணக்கில் பணம் தராமல் எந்த காரியமும் செய்ய முடியாது என்ற நிலை நிலவுவதாக பொது மக்கள் புலம்புகின்றனர். இங்கு பணியாற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களின் லஞ்ச சுருட்டல்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல், சாமானியர்கள் தவிக்கின்றனர். இரு சக்கர ஓட்டுனர் உரிமம், நான்கு சக்கர ஓட்டுனர் உரிமம், இலகு ரக, கன ரகம் என்று சகல வண்டிகளுக்கும் உரிமம் வாங்க லஞ்ச அபிஷேகம் செய்தால் தான் காரியம் நடக்கும்.

இதில், மினி பஸ் உரிமையாளர்களின் பாடு தான் ரொம்ப திண்டாட்டம். ஒரு பெர்மிட்டுக்கு ரூ. 2௦,௦௦௦/- என்ற விகிதத்தில் “வெள்ளையப்பனை” வெட்டினால் தான் வழித்தடத்திற்கான அனுமதி கிடைக்கும். இந்த பணத்தை, போக்குவரத்து அலுவலர்கள் நேரடியாக வாங்குவதில்லை. மாறாக, இதற்கென்றே அவர்கள் நியமித்திருக்கும் இடைத்தரகர்கள் (brokers) மூலகமாக வாங்குகிறார்கள்.

ஆர்.டி.ஓ. அலுவலர்கள் வாங்கும் லஞ்சத்தில், மாவட்டம், மாநிலம், அமைச்சர் என்று எல்லா மேல் நிலைகளுக்கும் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பணம் பாதாளம் வரை பாயாமல், மேல் நோக்கிப் பாய்கிறது. இடைத்தரகர்கள் ஜீபே மூலமாகப் பணத்தை பெற்று அதிகாரிகளுக்கு அதை மடை மாற்றுகின்றனர். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் மினி பஸ் உரிமையாளர்கள், தங்கள் பேருந்துகளை விற்று விட்டு, வேறு தொழிலுக்குப் போய் விடலாமா என்று எண்ணுகிறார்கள்.

சமீபத்தில், தமிழக அரசு, விரிவான வழித்தடம் மற்றும் புதிய வழித்தடம் என்று இரண்டு திட்டங்களை அறிவித்தது. இந்த இரண்டு திட்டங்களுமே ஆர்.டி.ஓ. அதிகாரிகள் பணத்தை கொள்ளையடிக்க வழி வகை செய்துள்ளன. எல்லாவற்றிற்கும் “வெள்ளையப்பனை” கொடுத்தால் தான் காரியம் நடக்கும் என்ற கேவலமான நிலைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து கழகம் போய் கொண்டிருக்கிறது என்பதை “சந்திரசேகரமான” ஆட்கள் உணருவது எப்போது?
செய்திகள் : சுந்தர்ராஜன் & சிவன் ராஜன் / எதிரொலி / 8939476777
