வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பரமக்குடி (தனி) தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர் எஸ். முத்தையா, திருவாடானை தொகுதி வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி, முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளர் மலேசிய எஸ்.பாண்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர் .
அவர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கும், இராமநாதபுரத்தில் போட்டியிட இருக்கும் வேட்பாளருக்கு தாமரை சின்னத்திலும் வாக்குகள் கேட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பஸ்நிலையம் முன்பு திரண்டு இருந்த பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் இருந்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது மக்கள் மத்தியில் பேசியதாவது :
உதயநிதி கூட்டத்தில் பேசும் பொழுது என்னைப் பற்றி விமர்சனம் செய்தார். மோடியின் முரட்டு பக்தன் எடப்பாடி என்று கூறினார். அவர் கண்டு பிடித்துள்ளார். அவருக்கு நோபல் பரிசு வழங்கலாம்
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது. அதை கண்டுகொள்ளாத ஒரு துணை முதல்வர் உதயநிதி அவர்களே உங்களது தாத்தா யாருக்கு முரட்டு பக்தராக இருந்தார் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பொழுது வாஜ்பாய் அவர்களுக்கு முரட்டு பக்தராக இருந்தார்
கருணாநிதி நாட்டு மக்களுக்காக திட்டங்களை கொண்டு வருவதற்காக டெல்லிக்கு செல்லவில்லை உங்கள் தாத்தா டெல்லிக்கு போகும் பொழுது நாட்டு மக்களுக்காக செல்ல மாட்டார்.
உங்கள் வீட்டுக்காக மட்டுமே செல்வார் 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக யாருடைய காலில் விழுந்தார் என நாட்டு மக்களுக்கு தெரியும்.
உதயநிதியின் வயது 48. என்னுடைய அரசியல் அனுபவம் கூட கிடையாது.
கண்களுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக. எங்களைப் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு அருகதை கிடையாது. ஊழல் என்றால் திமுக. திமுக என்றால் ஊழல்.
ஐந்தாண்டு காலமாக கமிஷன் , கரப்சன் , கலெக்சன் இது தான் திமுக என்ன திட்டத்தை கொடுத்தீர்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு என்ன திட்டத்தை கொடுத்தீர்கள். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு
எங்களது ஆட்சியின் போது அரசு மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்தேன் .
சட்டக் கல்லூரியை கொண்டு வந்தேன். நான் ரூ.400 கோடியில் ஒரு கல்லூரி, ரூ 120 கோடிகள் ஒரு கல்லூரி என இரண்டு கல்லூரிகளை கொண்டு வந்தேன் எனவும்,
விவசாயிகள் வளம் பெறுவதற்காக காவிரி - குண்டாறு - வைகை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து கொண்டு வந்த திட்டத்தை ஆட்சி மாறியதும், தி.மு.க.வினர் இத் திட்டத்தை கிடப்பில் போட்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளனர்.
ஆட்சி காலத்தில் என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம் என்பதையும்,
தற்போதைய தி.மு.க. ஆட்சியில் எந்தெந்த துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளதென்பதையும் விபரமாக பட்டியலிட்டு அடுக்கடுக்காக ஆவேசமாக கூறியதுடன் மக்களை மீட்போம் … தமிழகத்தை காப்போம் … என கூறியும், தற்போதைய தி.மு.க. ஆட்சியை விரட்டுவோம் என பேசினார்.
முன்னதாக, பரமக்குடி நகரில் திறந்த ஜீப்பில் நின்றபடியே சாலையின் இருபுறமும் கூடியிருந்த பெண்கள், ஆண்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் இரட்டை விரலை காண்பித்து வாக்கு சேகரித்தபடி வந்தார்.
பிரச்சாரத்தில் மாவட்ட அ.தி.மு.கழகச் செயலாளர் எம்.ஏ. முனியசாமி, முன்னாள் எம்.பி.க்கள் நிறைகுளத்தான் ,தர்மர், முன்னாள் எம்.எல்.ஏ. சதர்ன்பிரபாகர், நகர் கழகச் செயலாளர் ஐ.வின்சென்ட்ராஜா, நகராட்சி உறுப்பினர்கள் வடமலையான், அப்துல்மாலிக் உள்பட மாவட்ட, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி முன்னாள் பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள், தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
