தேமுதிக மாநில நிருவாகி சண்முகவேல், குற்றச்சாட்டு!
பள்ளி, கல்லூரிகளுக்கு இடையே கொடிய நோய்களைப் பரப்பும் “குப்பைக் குளத்தை” பாளையங்கோட்டை மண்டல நிருவாகம் கண்டு கொள்ளவில்லை! என தேமுதிக மாநில நிருவாகி சண்முகவேல் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வர்த்தக அணியின் மாநிலச் செயலாளர் நெல்லை கே.சண்முகவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டையில் புகழ்மிக்க பல்வேறு கல்வி நிறுவனங்கள் இருக்கின்ற காரணத்தினால், “பாளையங்கோட்டையை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு” என அழைத்து மகிழ்கிறோம்.
இத்தகைய பெருமை மிக்க பாளையங்கோட்டையின் அடையாளங்களில் ஒன்று தூய யோவான் கல்லூரி. இந்த பெருமை மிக்க யோவான் கல்லூரியின் தென்பகுதியில் கிழக்கு நோக்கி மாவட்ட பத்திரப் பதிவு அலுவலகம் செல்லும் சாலை உள்ளது. தூய யோவான் கல்லூரியின் கிழக்குப் பகுதியில் தூய யோவான் மேல்நிலைப் பள்ளியும், தெற்குப் பகுதியில் கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏஞ்சலோ மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆகிய நான்கு கல்வி நிறுவனங்கள் இந்த சாலையில் இரு பக்கங்களிலும் உள்ளன.

இந்த சாலையின் வட பகுதியில் தூய யோவான் கல்லூரியின் காம்பவுண்டு சுவர் அருகே “மாபெரும் குப்பைக் கிடங்கு குப்பைக் குளம்” போன்று காட்சி அளிக்கிறது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் அடிக்கடி பல்வேறு செய்திகள் வெளியிட்ட பின்னரும் திருநெல்வேலி மாநகராட்சியின் பாளையங்கோட்டை மண்டல நிருவாகம் “யாருக்கோ வந்த விதி” என கண்டுகொள்ளாமல் இருப்பது பொதுமக்களுக்கு பெரும் வருத்தத்தை அளிப்பதுடன் அந்த வழியாகச் செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் கொடிய நோய்களைப் பரப்பும் அபாயச் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சில் உள்ள நான்கு மண்டலத்திற்கும் ஒரு “உதவி ஆணையாளர்” நியமிக்கப்பட்டு தங்கள் மண்டலத்திற்கு உட்பட்ட நிருவாகத்தை கவனிக்கும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் தனது பொறுப்பை தட்டிக் கழித்து தனக்கு வழங்கப்பட்ட பணியில் அஜாக்கிரதையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுபோன்ற அதிகாரிகளால் தமிழக அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

எனவே தமிழக அரசும், திருநெல்வேலி மாவட்ட நிருவாகமும், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளரும் இதுகுறித்து போர்க்கால நடவடிக்கை எடுத்து பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியின் தென்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை முழுமையாக அகற்றவும், தொடர்ந்து அந்தப் பகுதியில் குப்பை கொட்டப்படாமல் தடுக்கப்படவும், பள்ளி கல்லூரி மாணவர்களையும், பொதுமக்களையும் கொடிய நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், இந்த சாலையில் இரு பக்கத்திலும் உள்ள புதர்களை அகற்றி, விசாலமான அந்த இடத்தில் மரங்களை நட்டு நெல்லை மாநகரத்தின் சுகாதாரத்தைப் பேணவும் நெல்லை மாநகராட்சி நிருவாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வர்த்தக அணி மாநிலச் செயலாளர் நெல்லை கே.சண்முகவேல் தமது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி செய்தியாளர்
செ.பா.தவசிக்கனி/ எதிரொலி / 8939476777
