ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது :
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் , முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் 2025-2026ஆம் ஆண்டிற்கான உயர்கல்விக்கான கல்வி கடன் மேளா முகாம் அடுத்தக்கட்டமாக இராமநாதபுரம் மாவட்டத்தில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் முதல் தளத்தில் 26.02.2026 அன்று காலை 11.00 மணி முதல் நடைபெறவுள்ளது.
உயர் கல்விக்கான கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர் - மாணவியர்கள் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க , கல்விக்கடன் பற்றிய ஆலோசனைகளைப் பெற விரும்பும் மாணவர் - மாணவியர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.
முகாமில் உயர்கல்விக்கு சேர்க்கை பெற்றிருக்கும் மாணவர் - மாணவியர்களுக்கு கல்விக்கடன் வழங்குதல் , விண்ணப்பங்களை மத்திய அரசின் பிரதமர் வித்யாலெட்சுமி திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்க வழிகாட்டுதல் , கல்விக்கடன் குறித்து சந்தேகங்களை தீர்த்து வைத்தல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
மாணவர் - மாணவியர்கள் கல்விக்கடன் பெறும் செயல்முறையினை எளிமைப்படுத்துதல், பின் தங்கிய கிராமப்புற மாணவர் - மாணவியர்களுக்கு நிதி உதவியியை உறுதி செய்தல், பிரதம மந்திரி வித்யாலெட்சுமி இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறையினை விளக்குதல், கல்விக்கான நிதி தடையில்லாமல் அனைவரும் உயர்கல்வி பெற வழிவகை செய்தல் இம்முகாமின் நோக்கமாகும்.
இந்தியா , வெளிநாடுகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு, உயர் பட்டப்படிப்பு, தொழில்நுட்பட தொழில்முறை பாடநெறிகளில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர் - மாணவியர்கள் பற்கேற்கலாம்.
மேலும் , இம்முகாமில் கலந்து கொள்ளும் மாணவர் - மாணவியர்கள் ஆதார் & பான் கார்டு (மாணவர் - மாணவியர் & பெற்றோர்), 10-ஆம் , 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், கல்லூரி சேர்க்கை கடிதம், கட்டண விவர பட்டியல், வருமானச் சான்றிதழ், வங்கிகணக்கு எண் (மாணவர் - மாணவியர் & பெற்றோர்). சாதிச்சான்றிதழ், பூர்விகச் சான்றிதழ், புகைப்படம் -4 (மாணவர் - மாணவியர் & பெற்றோர்) , வங்கி கோரும் பிற ஆவணங்கள் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறக் கூடிய கல்வி கடன் மேளா முகாம்களில் வங்கிகள் நேரிடையாக பங்கேற்று பிரதம மந்திரி வித்யாலெட்சுமி இணையதளம் மூலம் பதிவு செய்து உடனடியாக கல்விக்கடன் வழங்கப்படும் என்பதால் விருப்பமுள்ள மாணவர், மாணவியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
