திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினராகவும் பணியாற்றியவர் நெல்லைத் தமிழறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவன். தொல்லியல்த் துறையில் மிகவும் தேர்ச்சிப் பெற்ற இவரை ‘பேராசிரியர் தொ.ப’ என அழைப்பர். இவர் எழுதிய புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரது தமிழ்த் தொண்டை பாராட்டும் வகையில் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டுத்திடல் (ஹைகிரவுண்ட்)
செல்லும் வடக்குச் சாலைக்கு, “தமிழறிஞர் தொ.பரமசிவன் சாலை” என்று அண்மையில் பெயர் சூட்டப்பட்டது. இதற்கான உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கு நோக்கி செல்லும் மேட்டுத்திடல் சாலையில் “தமிழறிஞர் தொ.பரமசிவன் சாலை” என்ற பெயர் பலகை வைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி, ‘தமிழறிஞர் தொ.பரமசிவன் சாலை’ என்ற பெயர் பலகையைத் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன் கான், திமுக சட்டதிட்டக் குழு உறுப்பினர் சுப சீதாராமன், கிறித்தவ உபதேசியார் நல வாரியத் தலைவர் விஜிலா சத்யானந்த், துணை மேயர் கே.ஆர்.ராஜு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.எஸ். லட்சுமணன், பாளையங்கோட்டை மண்டலத் தலைவர் மா.பிரான்சிஸ், மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.கோகுலவாணி, சு.பேச்சியம்மாள் மற்றும் தமிழ் அறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவன் துணைவியார் இசக்கியம்மாள், மகள் விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை செய்தியாளர்:
செ.பா.தவசிக்கனி, எதிரொலி / 8939476777
