மனிதர்களது உடல்நலனை பேணி பாதுகாக்க தற்போதைய தமிழ்நாடு அரசு நடமாடும் மருத்துவம் , இல்லம் தேடி மருத்துவம் , நலம் காக்கும் ஸ்டாலின் என பல்வேறு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி செயல்படுத்தி வருவதை நாம் கண்கூடாக காண முடிகிறது. இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முன்னொரு காலத்தில் பரந்து விரிந்து நகருக்கே பெருமை தேடி தந்த ” வைகையாறு ” தற்போது மணல் கொள்ளையால் தட்டான் தரையாகவும், நாணல்கள் அடர்த்தியாக வளர்ந்து வைகை ஆறா ? நாணல் தோப்பா ? என தெரியாத அளவிற்கு உள்ளது.

இந்நிலையில், பரமக்குடி வைகையாற்றுக்குள் நகரில் சேகரிக்கப்படும் குப்பை – கூளங்களை வைகையாற்றில் கொட்டி வைகையாற்றை சுகாதாரம் இல்லாமல் செய்வதில் சுகாதாரமான நகரம் என சொல்ல கூடிய சம்மந்தப்பட்ட துறையினரே முதன்மை பெற்றுள்ளனர். மேலும், வைகையாற்றில் கொட்டப்பட்டு வரும் குப்பை – கூளங்கள் – டயர்களை அன்றாடம் எரித்தும் வருகின்றனர். இதனால், வைகை கரையோரம் வசிக்கும் மக்கள், பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்பட்டவர்கள் என அனைவரும் எரியூட்டப்பட்ட புகையினை சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறலுடன், திக்கு, முக்காடி … வருவது தொடர்கதையாக உள்ளது.

இதனால் ஆஸ்துமா உள்பட நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்கள் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. மக்கள் நலனை பாதுகாக்க அரசு ஒரு புறம் பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வரும் வேளையில் , மக்களை பேணி பாதுகாக்கவும் … நகரை தூய்மை படுத்தும் … சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் மெத்தனம் … கவனக் குறைவால் பல பேருடைய உயிருக்கே உத்தரவாதம் இல்லாமல் வாழ்ந்து வரும் கவலைகிடமாக உள்ளது.

மக்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நேரடியாக கண்காணித்து போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து குப்பை – கூளங்களை வைகையாற்றினுள் கொட்டாமலும், தீ வைத்து எரிப்பதை தடுத்தும் பொதுமக்களது உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டுமென வலியுறுத்தி கூறியுள்ளனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் / 8939476777
