இந்த சோதனையால் போக்குவரத்து துறை அலுவலகங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், பொதுமக்களிடம் இருந்து வாகன பதிவு, ஓட்டுநர் உரிமம் வழங்குதல், உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக முறைகேடாக பணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


அதன்படி, காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 40 RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது அலுவலகங்களில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன், முக்கிய ஆவணங்கள், கணினி பதிவுகள், விண்ணப்ப கோப்புகள் மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பான பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வந்த புரோக்கர்கள் மற்றும் இடைத்தரகர்களின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம் தொடர்பான விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னர் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்த அதிரடி சோதனை காரணமாக பல வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணிகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது.


லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த திடீர் நடவடிக்கை, அரசு அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுவதுடன், சோதனை முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
செய்திகள் ; லக்ஷ்மிகாந்தன் எதிரொலி / 8939476777
