மே 1 ம் தேதி வைகை ஆற்றில் அருள்மிகு கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளதால், அழகர் கோவிலில் இருந்து புறப்பட்டு மீண்டும் அழகர் கோவில் திரும்பும் வரை கள்ளழகர் எழுந்தருளும் முக்கிய இடங்கள் மற்றும் அதன் நேரங்கள் குறித்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் திருவிழாவை சந்தித்த மதுரை மக்கள் அடுத்ததாக சித்திரை திருவிழா கொண்டாட்டத்திற்கும் தயாராகி வருகின்றனர். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்.28ஆம் தேதியும், திருத்தேரோட்டம் ஏப்.29ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் மே 1ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளது. மேற்கண்ட நிகழ்வுகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதால் மதுரை மாநகர காவல் துறையும் மாநகராட்சி நிர்வாகமும் இந்து சமய அறநிலையத்துறையும் போதுமான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

இந்நிலையில் ஏப்ரல் 29ஆம் தேதி புதன்கிழமை மாலை 6.15 மணிக்கு அழகர் மலையில் இருந்து கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கி புறப்படுகிறார். ஏப்.30ஆம் தேதி மதுரை மூன்றுமாவடி அருகே காலை 5.30-6.30 மணிக்குள் அருள்மிகு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஏப்.30ஆம் தேதி இரவு 11.00-11.59 மணிக்குள் தல்லாகுளத்திலிருந்து வைகை ஆற்றில் எழுந்தருள தங்க குதிரை வாகனத்தில் புறப்படுகிறார். மே 1ஆம் தேதி அதிகாலை 5.35-5.55 மணிக்குள் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் எழுந்தருள்கின்றார். பிறகு அன்று பிற்பகல் 12 மணியளவில் ராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு தீர்த்தவாரி நிகழ்வு நடைபெறுகிறது.

மே 2ஆம் தேதி காலை 11.30 மணியிலிருந்து பிற்பகல் 3 மணிக்குள் வண்டியூர் வைகை ஆற்றுக்குள் அமைந்துள்ள தேனூர் மண்டகப்படியில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 11 மணிக்கு மேல் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய நடைபெறுகிறது. மே 4 ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 2 மணிக்கு நடைபெறும் பூப்பல்லக்கு நிகழ்ச்சிக்கு பிறகு தல்லாகுளத்தில் உள்ள மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து பூப்பல்லத்தில் அழகர் மலை நோக்கி புறப்படுகிறார். மே 5ஆம் தேதி காலை 10.40 – 11.10 மணிக்கு அழகர் மலை சென்றடைகிறார்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed