எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன், இவர் இன்று தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்ல, இந்திய அளவில் இவருடைய அரசியல் பாதையை தனித்துவமான பாதையாக அமைத்து கொண்டு, அதில், மிகவும் வெற்றிகரமாக பயணித்து கொண்டிருக்கிறார். இவருடைய பக்குவப்பட்ட அரசியலால் இன்றைய தமிழக இளைஞர்கள் இடையே இவர் சார்ந்த சமூகத்திற்கு மட்டும் இல்லாமல் அனைத்து சமூக மக்களும் இவருடைய அரசியலை புரிந்து கொண்டும், ஏற்றுக்கொண்டும் இவர் அரசியல் பாதையில் பயணிக்க துவங்கிவிட்ட இந்த சூழ்நிலையில், இவருடைய அரசியல் பார்வை என்பது தமிழ்நாட்டையும் கடந்து மற்ற மாநிலங்களிலும் இருக்கக்கூடிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க கூடிய வலிமையை இவர் பெற்றிருக்கிறார்.

தன்னுடைய மாணவ பருவத்தில் இருந்து அரசியலில் பக்குவப்பட்ட எழுச்சி தமிழர் அவர்கள், மிகவும் இளம் வயதிலேயே தன்னுடைய அரசு வேலையை துறந்து இலங்கை தமிழர்களுக்காகவும், தனது சமூக மக்களுக்காகவும், மற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் குரல் கொடுக்கவும், பணி செய்யவும் தனது போராட்ட வாழ்க்கையை துவங்கி விட்டார். அந்த காலகட்டத்தில் இருந்து மதுரையில் துவங்கிய இவருடைய போராட்ட வாழ்க்கை, இன்று வரை அதே நெருப்பு பாதையில் பயணித்து கொண்டிருக்கிறார்.

இவர், தன்னுடைய சமுதாய மக்களுக்கு மட்டும் இல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கே இருந்தாலும் நான் குரல் கொடுக்க ஓடோடி வருவேன் என்று அறைகூவல் விட்டு போராடி கொண்டு இருக்கிறார். இவர் செயல் திறமை மட்டும் இல்லாமல் பேச்சு திறமையிலும் வல்லவராக இருப்பதினால், அவர் எந்த இடத்தில் பேசுகிறாரோ அந்த இடத்திற்கு ஏற்றார் போல் அங்கு இருக்கக்கூடிய தரப்பு மக்களை கவரக்கூடிய பேச்சு திறமையை கொண்டவர். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசக்கூடிய பக்குவப்பட்ட வார்த்தையும், நிர்வாகிகளை பக்குவப்படுத்தும் வார்த்தையும், கட்சி பொதுக் கூட்டத்தில் பேசும் போது இருக்காது, அதற்கு நேர் மாறாக அவருடைய பேச்சு அனல் பறக்கும் கேட்பவர்களுக்கு உள்ளம் சூடேறும், அதேசமயம் மற்ற கட்சியினுடைய மேடையில் பேசினால் அந்த கூட்டத்தில் இருக்கக்கூடிய அந்த கட்சியினரை தன் வயப்படுத்தி, தன்னுடைய கொள்கைகளையும், தன்னுடைய அரசியல் பாதையில் இருக்கக்கூடிய நியாயமான கருத்துக்களை எடுத்து சொல்லியும் அவர்களை பக்குவப்படுத்துவார்.


அதேபோல், கல்லூரிகளில் பேசினால், கிட்டத்தட்ட அவர் ஒரு பேராசிரியராக மாறி அவர்களுக்கு மேடையிலேயே வகுப்பு எடுக்கக்கூடிய, வகுப்பு ஆசிரியராக மாறிவிடுவார், மாணவர்கள் இவரிடம் கலந்துரையாடல் நடத்தினால், அவர்களுக்கு எளிமையாக புரியும் வகையில் மிகவும் தெளிவாக விளக்கங்களை அளிப்பார், தன்னுடைய கொள்கைகளுக்கு எதிர்மறையான கொள்கைகளை கொண்டவர்கள் கூட்டத்திற்கு இடையே பேசும் போது, அவர்கள் நெருப்பில் அமர்ந்திருப்பது போல் அமர்ந்திருக்கும் படி செய்து விடுவார், இறுதியில் இவர் பேசிய பேச்சில் இருக்க கூடிய நியாயத்தை ஏற்றுக் கொண்டு அவர்களே இவர் அருகில் வந்து கை கொடுத்து வாழ்த்து சொல்லும் அளவிற்கு செய்துவிடுவார்.
இப்படி பக்குவப்பட்ட ஒரு சிறந்த அரசியல்வாதி தமிழ்நாட்டில் தற்போது யாரும் இல்லை என்று அனைத்து தரப்பினரும் சொல்லும் அளவிற்கு இவர் தனித்துவம் கொண்ட ஒரு தலைவராக இருந்து வருகிறார்.


தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்ல இந்திய அளவில் இருக்கக்கூடிய தேசியத் தலைவர்கள் கூட இவரின் மீது தனி மதிப்பை வைத்திருக்கிறார்கள், அறிவார்ந்த அரசியல்வாதிகள் யாரும் இவரை விமர்சித்து பேசக்கூட மாட்டார்கள். அப்படி இவரை விமர்சித்து பேசுகிறார்கள் என்றால் ஒன்று அவர்கள் அரைகுறை அரசியல்வாதியாக இருப்பார்கள், அல்லது யாரேனும் ஏவி விட்டு பேசக்கூடிய ஏவல் ஜென்மங்களாக இருப்பார்கள். தமிழக அரசியலில் இவரை தன் பக்கம் இழுப்பதற்கு அனைத்து தரப்பும் முயற்சி செய்யும், ஆனால், இவர் தன்னுடைய கொள்கைக்கு எதிர்மறை கொள்கை உடையவர்கள் யார் என்பதை அடையாளம் காட்டி, அவர்கள் இருக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன் என்று பகிரங்கமாக பேசக்கூடியவர், ஒருமித்த கொள்கையை கொண்டிருப்பவர்களோடு தொடர்ந்து பயணிக்க, தன் தரப்பில் விட்டு கொடுத்து கூட பயணிக்க கூடிய பண்பை கொண்டுவர்.


இவர் தன்னுடைய வாழ்க்கையில் சுக துக்கங்களை எல்லாம் இழந்து, சரியான ஓய்வின்றியும், உறக்கம் இன்றியும், ஓடிக்கொண்டே இருக்கின்றார். பல நேரங்களில் உடல் நலம் குன்றி போவதால் அதற்காக அவர் ஓய்வு எடுக்க கூட முடியாத அளவிற்கு அவரை சுற்றி எப்போதும் நள்ளிரவு நேரங்கள் வரை கூட மக்கள் சூழ்ந்து நின்று கொண்டே இருப்பார்கள். அப்போது கூட அவர்களிடம் முகம் சுளிக்காமல் வெகு நேரம் மணி கணக்கில் நின்ற நிலையிலேயே அவர்களை சந்தித்து கொண்டிருப்பார். (அவர் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பது போல் புகைப்படங்கள் கூட நாம் காண முடியாது.) அந்த அளவிற்கு அவரை ஒரு மக்கள் வெள்ளம் எப்போதும் சூழ்ந்து கொண்டே இருக்கும்.


இப்படி, தன்னலம் இன்றி உழைத்து கொண்டிருக்கும் ஒரு மாமனிதரை ஒரு சிலர் தரக்குறைவாக விமர்சனம் செய்கின்றார்கள். அதுகூட அவருக்கு நன்மையாக தான் போய்க்கொண்டிருக்கிறது. அதற்கு காரணம், விமர்சனம் செய்பவர்களோடு இருப்பவர்களே இவரை உள்ளுக்குள் நேசித்து கொண்டுதான் இருப்பார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. எப்படி எதிர்தரப்பில் இருப்பவர்களையும் இவருடைய அணுகுமுறை ஆட்கொண்டு தான் இருக்கும்.
தனது சமூகம் சார்ந்து மட்டும் இவர் எப்போதும் உழைப்பதில்லை, ஒடுக்கப்பட்டவர்கள் எங்கிருந்தாலும் எந்த சாதியின் உள் இருந்தாலும், அவர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக குரல் கொடுக்க தயங்கவே மாட்டார்.


இவருடைய அரசியல் பார்வையில் ஒடுக்கப்பட்டவர்கள் என்பவர்கள் தன்னுடைய சமுதாயத்தினர்கள் மட்டுமல்ல, உயர்சாதிகளில் உட்பிரிவுகளும் உள்ளன. அதில், பொருளாதார பலத்தாலும், அதிகார பலத்தாலும் உயர்ந்து இருப்பவர்கள் மற்றவர்களை அடக்குமுறைக்கு ஆளாக்கி ஒதுக்கி வைப்பார்கள். அவர்களுக்கும் இவர் முதல் ஆளாய் குரல் கொடுப்பார். அது மட்டும் இல்லாமல், இதேபோன்ற சம்பவம் உள்ளூரில் நடந்தாலும், வெளிநாடுகளுக்கு இடையே நடந்தாலும் அதற்காக நான் குரல் கொடுப்பேன் என்று இவர் திடமாக கூற கூடியவர்.

தமிழ்நாட்டில், இந்து மதத்தில் இருக்க கூடிய சாதிகளுக்கு இடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் அடக்குமுறைகளையும் எதிர்ப்பதுடன் மட்டுமில்லாமல், சிறுபான்மையின மக்களுக்கும் இவர் எப்போதும் பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறார். நமது நாட்டில் சிறுபான்மையினராக இருக்கக்கூடிய கிருத்துவ மதத்திற்கு ஆதரவாக இவர் நின்றாலும், சமீபத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஒரு முஸ்லிம் நாடான ஈரானை தாக்குதலுக்கு உள்ளாக்கும் போது, தமிழ் நாட்டிலிருந்து முதல் ஆளாக தன்னுடைய எதிர்ப்பு குரலை பதிவு செய்தார். அது மட்டும் இல்லாமல் அந்த கிறிஸ்தவ நாடுகளுக்கு எதிராக முஸ்லிம் மக்களுடன் சேர்ந்து அவர்களுடைய போர் நடவடிக்கைகளை கண்டித்து, ஆர்ப்பாட்டமும் செய்கிறார்.


அடுத்ததாக, தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் கூலி வேலை செய்து வருகிறார்கள். அதை ஒரு சில அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநலத்திற்காக, அவர்களை எதிர்த்து குரல் கொடுத்து கொண்டு உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்புகளை இவர்கள் தட்டி பறிக்கிறார்கள், என்ற ரீதியில் விஷமத்தனமான பிரச்சாரங்களை தமிழ்நாட்டு மக்களிடையே பரப்பி கொண்டிருக்கிறார்கள். அதனால் தமிழ்நாட்டில் பல இடங்களில் வெளி மாநில அப்பாவி தொழிலாளர்கள் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்து வந்தன. அப்பாவி வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட கூடிய சம்பவங்களை கண்டித்தும், தொல். திருமாவளவன் அவர்கள் கண்டன குரல் கொடுத்திருக்கிறார்.

இந்த சம்பவங்களை கண்டித்த அவர் கூறுகையில், வட மாநிலத்தில் இருந்து கூலி வேலை செய்வதற்காக வரக்கூடிய மக்கள் பெரும்பாலும் மிகவும் அடித்தட்டில் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்கள்தான், அவர்கள் மீது தமிழ்நாட்டில் இருக்க கூடிய சில அரசியல்வாதிகள் வன்மத்துடன் தமிழ்நாட்டு அப்பாவி இளைஞர்களை ஏவி விடுவது தவறான செயலாகும்.
இது போன்ற சுயநல அரசியல்வாதிகள் சிலரின் விஷமதனமான தூண்டுதலால் இரண்டு தரப்பிலும் இருக்க கூடிய அப்பாவி இளைஞர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். ஒருவன் காயப்படுகிறான், மற்றொருவன் வழக்கில் சிக்குகிறான். இதனால், யாருக்கு என்ன பயன். நாம் வெளி மாநிலத்தவர்களை கண்டிக்க வேண்டும் என்றால், நம்முடைய உழைப்புகளையும், பொருளாதாரத்தையும், சுரண்டி பிழைக்க கூடிய மார்வாடிகள் போன்ற பொருளாதாரத்தால் உயர்ந்து இருக்கக்கூடிய வெளி மாநிலத்தவர்கள் பலர் இருக்கிறார்கள் அவர்களைத் தான் நாம் எதிர்க்க வேண்டும். அப்பாவி கூலித்தொழிலாளர்களை அல்ல, என நமது தமிழ்நாட்டு இளைஞர்களால் தாக்கப்பட கூடிய வெளி மாநில தொழிலாளர்கள் பக்கம் நின்று கண்டன குரல் கொடுப்பார்.


அதுமட்டுமில்லாமல், தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் எப்போதும் இழித்தும், பலித்தும் பேசி கொண்டிருக்க கூடிய சில OBC பிரிவில் உள்ளடங்கிய சாதியினர்களுக்கு எதிராக, அவர்களுடைய உரிமைகளை பறிக்கும் வகையில் மோடி அரசு கொண்டு வந்த, EWS என்ற சட்டத்தை எதிர்த்து இவர் மிகவும் பலமாக எதிர்ப்பு குரல் கொடுத்தார்.


இந்த சட்டத்தை மோடி கொண்டு வருவதால், இவர் சார்ந்த சமூகத்திற்கு எந்த விதத்திலும் 1 % கூட எந்த பாதிப்பும் இல்லை. இருந்தாலும், இவர் மிகவும் திடமாக அந்த சட்டத்தை எதிர்த்து எதிர்ப்பு குரல் கொடுக்க காரணம், OBC சமூகத்திற்கு அநீதி செய்யும் விதமாக, மோடி இந்த சட்டத்தை கொண்டு வந்து அந்த பிரிவினர்களுக்காக ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் 10% இட ஒதுக்கீட்டை தட்டி பறிப்பதினால், OBC பிரிவில் உள்ளடங்கி இருக்கக்கூடிய, வன்னியர், தேவர், நாயுடு, முதலியார் நாடார், செட்டியார் உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்ட சமூகத்தினர் உடைய படித்த இளைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகளுடைய உரிமைகளை தட்டி பறித்து, மோடி சமூக அநீதியை செய்வதாக அந்த சமூக மக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில், திருமாவளவன் அவர்கள் EWS சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் காரசாரமாக உரை நிகழ்த்தினார். மேலும், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களும் செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இருக்கிறார்.

ஆனால், இதையெல்லாம் செய்ய வேண்டிய அந்த OBC பிரிவில் உள்ளடங்கி இருக்கக்கூடிய அனைத்து சாதி அமைப்பு தலைவர்களும் மோடியை எதிர்த்து வாயை கூட திறக்கவில்லை என்பதுதான் கொடுமை, இந்த உண்மையையெல்லாம் OBC பிரிவின் உள் அடங்கிய அனைத்து சமுதாய இளைஞர்களும், மாணவ – மாணவிகளும் உன்னிப்பாக கவனித்து தான் வருகிறார்கள். அவர்கள் அனைவரும் மனதார, விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களை மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் பாராட்டி தான் வருகிறார்கள்.

இப்படி, தமிழ்நாட்டில் உள்ள குக் கிராமங்கள் அளவில், அனைத்து சமூகங்களிலும் இருக்கக்கூடிய ஒடுக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பதில் துவங்கி, மாநிலங்கள் அளவில் நடக்கக்கூடிய இனவாத, மதவாத அடக்குமுறைகளுக்கும் குரல் கொடுப்பதுடன், வெளிநாடுகளிலும் இருக்கக்கூடிய அடக்குமுறை அநீதிகளுக்கும் இவர் குரல் கொடுக்கின்றார், அநீதிகள் எந்த மண்ணில் நடந்தாலும் அதற்காக முதல் ஆளாய் இவர் குரல் கொடுத்து பாதிக்கப்படுபவர்கள் பக்கம் நிற்பதினால், தமிழ்நாட்டு அரசியலில் இவர் ஒரு தனித்துவமான தலைவராக, இன்றைய தலைமுறை இளைஞர்கள் இவரை ஒரு சாதி தலைவராக பார்க்காமல், தேசிய அளவில் ஒரு சமத்துவ தலைவராக அனைவரும் மனதிலும் இடம் பிடித்து இருக்கிறார்.

கட்டுரை / P.G. பாலகிருஷ்ணன் எதிரொலி / 8939476777
