மதுரை ரயில் நிலையம் மேற்கு நுழைவாயில், மாப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் இன்று காலை திடீரென முழுமையாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், மண்டபத்தை ஒட்டி டீக்கடை நடத்தி வரும் குமரேசன் மற்றும் அங்கு டீ குடிக்க வந்த இப்ராஹிம் ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கிப் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்த மதுரை டவுன் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரையும் மீட்டனர். பின்னர், 108 அவசரகால ஊர்தி மூலமாக அவர்கள் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
​

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு:

இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்களும், அங்கு கடை நடத்தி வருபவர்களும் கூறுகையில், “இந்த சுற்றுச்சுவர் மிகவும் பலவீனமாக உள்ளது, இதனை இடித்துவிட்டு புதிய சுவர் எழுப்புங்கள் எனப் பல வருடங்களுக்கு முன்பே கோரிக்கை விடுத்தோம். ஆனால், ரயில்வே நிர்வாகம் அதனைக் கண்டுகொள்ளவில்லை” எனக் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், மண்டபத்தில் திருமண வைபவங்கள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்தச் சுவர் இடிந்து விழுந்திருந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, ரயில்வே நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடங்களில் உடனடியாக ஆய்வு செய்து, பொதுமக்கள் கூடும் இடங்களில் மோசமான நிலையில் உள்ள சுற்றுச்சுவர்கள் மற்றும் கட்டிடங்களை அகற்றிப் புனரமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed