விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் நடந்த முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழா இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் விழாக்களில் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள் ஏழு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் 6 – நாளில் சூரசம்காரமும் ஏழாம் நாளில் திருக்கல்யாண வைபவமும் கோலாகலமாக நடைபெறும் இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்வார்கள்.

அதே போல் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த வாரம் கோயிலில் கணபதி ஹோமத்துடன் கோலாகலமாக துவங்கியது. கோயிலில் எழுந்தருளிய சுப்பிரமணியசாமிக்கு தினமும் சஷ்டி பாராயணம் சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
சுவாமி ஒவ்வொரு நாளும் வள்ளி தெய்வானை தாயார்களுடன் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவின் 7ம் நாளான நேற்று முக்கிய நிகழ்வான முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் கோயிலில் உள்ள சஷ்டி மண்டபத்தில் கோலாகலமாக நடந்தது.

அதிகாலையில் மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கும் வள்ளி தெய்வானை தாயார்களுக்கும் 18 வகையான அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து உற்சவரான சுப்பிரமணிய சுவாமி வெண்பட்டு உடுத்தி சஷ்டி மண்டபத்தில் உள்ள மணமேடையில் எழுந்தருளினார்.
ஆரஞ்சு பட்டில் வள்ளி தாயாரும் பச்சை பட்டில் தெய்வானை தாயாரும் அவருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் திருமணத்திற்கான வைபவ பூஜைகள் தொடங்கியது. அக்னி சாட்சியாக மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர். மங்கள மேளம் முழங்க சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை தாயார் களுக்கு தாலி அணிவித்தார். பக்தர்கள் கரவொலி எழுப்பியும் அட்சதை தூவியும் வணங்கினர். மனக்கோளத்தில் காட்சியளித்த முருகப்பெருமானுக்கு பல்வேறு வகையான சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜையின் முடிவில் மணவிருந்தும் பக்தர்களுக்கு அன்னதானமும் நடந்தது.

வத்திராயிருப்பு, கூமாபட்டி, தம்பி பட்டி, புதுப்பட்டி, சேது நாராயணபுரம், மகாராஜபுரம் உட்பட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கந்த சஷ்டி விழா குழுவினர் பக்தர்கள் கோயில் நிர்வாக அதிகாரி ஜோதி லட்சுமி அறநிலையத் துறையினர் செய்தனர்.
செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777
